தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை


தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 28 Oct 2017 8:39 PM GMT)

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரித்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ் செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்டமாக மண்டல அளவிலான கண்காட்சியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வித்துறை இயக்குனர் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவின் மாதிரி வடிவம் மிக பிரமாண்டமான முறையில் வைக்கப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு, வளங்களின் மேலாண்மை, உணவு பாதுகாப்பு, நீர்வள பாதுகாப்பு போன்ற கருத்துகளை மையமாக வைத்து 359 படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் நாளை(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை பாகூர் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளி மாணவர்களும், மதியம் 1-30 மணி முதல் மாலை 4 மணி வரை உழவர்கரை நகராட்சி மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள பள்ளி மாணவர்களும் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். 31-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மாணவர்கள் பார்வையிடலாம். கணகாட்சியை தினமும் மாலை 4மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) 3 நாட்கள் மாநில அளவிலான கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தினமும் பள்ளி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் பார்வையிடலாம்.

அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு செய்து வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது அமலுக்கும் வந்துள்ளது. அதை மீறி தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்தால், எந்த தனியார் பள்ளி என்று பார்க்காமல், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் பள்ளிகள் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. புதுச்சேரி அரசுப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளது. பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story