மழைநீரை தேக்கி ஏரிகளுக்கு திருப்பிவிட நல்லூர் பகுதியில் அணை கட்ட வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


மழைநீரை தேக்கி ஏரிகளுக்கு திருப்பிவிட நல்லூர் பகுதியில் அணை கட்ட வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-29T02:28:48+05:30)

மழைநீரை தேக்கி ஏரிகளுக்கு திருப்பிவிட நல்லூர் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் சுசீலா, சிப்காட் வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து உள்ள நிலையில் பயிர்க்கடன் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும். மண் வளத்துறையால் தர்மபுரி மாவட்டத்தில் 8 லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஒரு மரக்கன்றுக்கு வழங்க வேண்டிய ரூ.25 மானியத்தை வழங்க வேண்டும். பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு ஆகிய 4 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் பென்னாகரம் அருகே மழைநீரை தேக்கி ஏரிகளுக்கு திருப்பிவிட நல்லூர் பகுதியில் அணை கட்ட வேண்டும். தர்மபுரியில் சாமந்தி பூவிற்கு விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இந்த கூட்டம் நடந்தபோது கருத்துக்களை தெரிவிப்பது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகளில் ஒருவருக்கும், சில விவசாயிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் அனைத்து விவசாயிகளுக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை கலெக்டர் விவேகானந்தன் சமாதானப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய நீர்பாசன திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story