மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதத்தில் 991 விவசாயிகள் தற்கொலை பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பிறகும் தொடரும் சோகம்

மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதத்தில் 991 விவசாயிகள் தற்கொலை பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பிறகும் தொடரும் சோகம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:06 PM GMT (Updated: 28 Oct 2017 10:05 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 4 மாதத்தில் 991 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். மாநில அரசு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்த பிறகும் இந்த சோகம் தொடருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 4 மாதத்தில் 991 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். மாநில அரசு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்த பிறகும் இந்த சோகம் தொடருகிறது.

991 விவசாயிகள் தற்கொலை

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிகளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 4 மாதத்தில் 991 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். அதிகபட்சமாக முதல் - மந்திரியின் சொந்த மாவட்டமான நாக்பூர் அடங்கிய விதர்பா மண்டலத்தில் 455 விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர்.

நடப்பாண்டு மட்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2 ஆயிரத்து 150 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் மட்டுமே குறைவு ஆகும். கடந்த ஆண்டு மாநிலத்தில் 2 ஆயிரத்து 339 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடரும் சோகம்

மாநில அரசு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியிட்ட பிறகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் தொடருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் நல ஆர்வலர் விஜய் கூறுகையில், “வறட்சி மற்றும் பருவம் தவறிய மழையால் வேளாண் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல வேளாண் விளை பொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை. இதுவே விவசாயிகள் தற்கொலை தொடருவதற்கான காரணம்” என்றார். 

Next Story