குறிஞ்சி மலர்கள்


குறிஞ்சி மலர்கள்
x
தினத்தந்தி 29 Oct 2017 5:30 AM GMT (Updated: 2017-10-29T10:42:18+05:30)

தமிழ் மக்களின் புவி சார் வாழ்க்கை அலாதியானது. மிதமான வெப்பமும் மிதமான குளிரையும் பெற்றுள்ள இந்த நிலப் பகுதியின் மலர்கள் பல நிறங்களில் உள்ளன.

மிழ் மக்களின் புவி சார் வாழ்க்கை அலாதியானது. மிதமான வெப்பமும் மிதமான குளிரையும் பெற்றுள்ள இந்த நிலப் பகுதியின் மலர்கள் பல நிறங்களில் உள்ளன. தமிழ் மொழியின் செழுமை மிக்க அழகியல், இந்த வண்ணங்களிலிருந்தும், மலர்களிலிருந்தும் தோன்றியவை. இந்த மலர்களில் முதன்மையானது என்று குறிஞ்சிப் பூவைப் பற்றி பண்டைய தமிழகம் பெருமை கொண்டுள்ளது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டு பிறந்து கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இதில் குறிஞ்சிப் பூக்கள் உள்பட 99 பூக்களின் பட்டியல் விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. குறிஞ்சி மலரின் சிறப்பு அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதன்படி நீலகிரி மலையில் குறிஞ்சி மலர்கள், 2018-ல் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குறிஞ்சிப் பூக்கள் பூக்கின்றனவா என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்புகிறார்கள். குறிஞ்சியில் பல வகைகள் உண்டு. ஓராண்டுக்கு ஒரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆறாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகைகளும் இருக்கின்றன.

ஒரு காலத்தில் ஐந்து வண்ணங்களில் குறிஞ்சிப் பூக்கள் இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். நீலம், கருநீலம் மட்டும் தான் இப்போது நீலகிரியில் காணப்படுகிறது. குறிஞ்சியின் நீல நிறம்தான் நீலகிரி மலையின் பெயராக அமைந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, மேல்பவானி, குந்தா ஆகிய இடங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூத்து நிற்கும் காட்சியைப் பார்க்க முடியும். கொடைக் கானல், மூணாறு மலைகளிலும் குறிஞ்சி பூக்கிறது.

பூக்களின் வருகையை வசந்தத்தின் வருகையாக, பழங்குடி மக்கள் கருதுகிறார்கள். மலர் பூக்கும் காலத் தொடக்கத்தைத் தங்கள் விழாக் காலத் தொடக்கமாக கணக்கிட்டுக் கொள்கிறார்கள். இயற்கையை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் இறை வழிபாட்டுக்கான காலமாக இந்தப் பூக்களின் வருகையை கணக்கிடுகிறார்கள். இவர்களின் மணவிழாக்களும் குடும்ப விழாக்களும் இந்தக் காலத்தில்தான் நடைபெறுகின்றன.

ஆனால், இத்தனை சிறப்பு மிக்க குறிஞ்சி பூக்கும் இயற்கை சூழலை பாதுகாக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. தமிழ் மக்களின் ஆதிப் பண்பாட்டின் அடையாளமாகவும் பெருமையாகவும் கருதப்படும் குறிஞ்சி மலர்களை அழிய விடாமல் பாதுகாப்பதும், அதைக் கொண்டாடுவதும் நம் கடமை என்கிறார்கள், இயற்கை ஆர்வலர்கள். 

Next Story