பல முட்களுக்கு மத்தியில் ஒரு பூ பூத்தாலும் அது ரோஜா செடிதான்


பல முட்களுக்கு மத்தியில் ஒரு பூ பூத்தாலும் அது ரோஜா செடிதான்
x
தினத்தந்தி 29 Oct 2017 6:00 AM GMT (Updated: 29 Oct 2017 5:34 AM GMT)

கடந்தகாலம் என்பது இனிமையாக இருப்பதில்லை. ஆனால் நிகழ்காலம் இனிமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலம் வளமாக அமையும். திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்.

டந்தகாலம் என்பது இனிமையாக இருப்பதில்லை. ஆனால் நிகழ்காலம் இனிமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலம் வளமாக அமையும். திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். இதில் பல ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆயிரம் முட்கள் விளைவதால் அது முட்செடியாகி விடாது. ஒரே ஒரு ரோஜா மலர்ந்தாலும் அது ரோஜாச் செடிதான்.

திருமணத்திற்கு முன்பு ஆண்- பெண் இருவர் வாழ்க்கையிலும் விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருக்கலாம். அவைகளை எல்லாம் உண்மையை சொல்லும் நோக்கத்தில் திருமணத்திற்கு பின்பு ஆணோ, பெண்ணோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன்என்றால் அப்படி சொல்லப்பட்டிருப்பது பலருடைய குடும்ப வாழ்க்கையில் முற்றுப்புள்ளி விழச் செய்திருக் கிறது.

குறிப்பாக இதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோருக்குள்ளும் ஒரு காதல் தோல்வியோ, கசப்பான அனுபவங்களோ இருந்துகொண்டுதான் இருக்கும். அதை அப்படியே கொட்டித்தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள் இருக்கக்கூடாது. நிச்சயதார்த்தத்திற்கு பின்பு ஆண்கள், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் மனம்விட்டு பேச விரும்புவார்கள். அப்போது அவர்கள் மிகுந்த பாதுகாப்பு உணர்வோடுதான் தனது வருங்கால மனைவியிடம் ஒவ்வொரு வார்த்தையையும் பேசுவார்கள். ஆனால் வெளிப்படையாக தன்னை வெகுளிபோல் காட்டிக்கொண்டு, தன்னையும் ஒரு பெண் காதலித்ததாக கதை சொல்ல ஆரம்பிப்பார்கள்.

அந்த கதையை பெண்கள் வலது காதோடு வாங்கி, இடது காதோடு வெளியே விட்டுவிடவேண்டும். மாறாக அதை அப்படியே உள்வாங்கி, ‘அவர்தான் இவ்வளவு மனந்திறந்து பேசுகிறாரே. நாமும் அதுபோல் நம்மை பற்றிய பழைய உண்மைகளை அவரிடம் சொல்லலாமே!’ என்று நினைத்து புலம்பிவிட்டால், அந்த உண்மையால் நிச்சயதார்த்தத்தோடு பந்தம் முறிந்துவிடும்.

திருமணத்திற்கு பின்பு தொடரும் வாழ்க்கை புதிதாக இருக்கவேண்டும். கடந்த காலத்தின் தாக்கம் அதில் இருந்துவிடக்கூடாது. அது தேவையற்றது. திருமண வாழ்க்கை என்பது சமூக அந்தஸ்தைப் பெறுகிறது. ஒருமுறை சமூகத்தின் பார்வையிலிருந்து விலகி வந்துவிட்டால் மீண்டும் அதே இடம் யாருக்கும் கிடைக்காது.

ஒரு ரோஜா பல முட்களுக்கு மத்தியில்தான் பூக்கிறது. முட்களை தவிர்க்க முடியாது. மனித வாழ்க்கையில் நெருக்கடிகள், பிரச்சினைகள், கவலைகள், கசப்புகள், கண்ணீர் போன்ற முட்கள் இருக்கத்தான் செய்யும். அவைகளை தவிர்த்துக்கொண்டு வாழ முடியாது. அதே நேரத்தில் அந்த முட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிடக்கூடாது. முட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றதுதான், மோசமான விஷயங்களுக்கு மதிப் பளிப்பது. தேவையற்ற விஷயங்களுக்கு மதிப்பளித்துவிட்டு எதிர்கால வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது. திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும்போது கடந்தகால வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதை தொடர்ந்து விடக்கூடாது. அந்த நினைவுகளும் மனதில் இருந்துவிடக்கூடாது.

சமீபகாலமாக நடக்கும் பல விவாகரத்துகளுக்கு கடந்த கால வாழ்க்கை காரணமாக காட்டப்பட்டுள்ளது. சென்றதை நினைத்து இருப்பதை இழந்து விடக்கூடாது.

மனோதத்துவ நிபுணர்களிடம் திருமணத்திற்கு பிந்தைய கவுன்சலிங்குக்கு வரும் ஆண்களில் பலர், ‘திருமணத்திற்கு முன்பே தன் மனைவி கன்னித்தன்மையை இழந்து விட்டாள். அதனால் அவளைவிட்டு விலகுகிறேன்’ என்று காரணம் சொல்கிறார்கள்.

வாழ்க்கை என்பது எதிர்காலம் என்கிற சாலையில் முன்னோக்கி பயணிப் பது. பின்னோக்கி செல்வது அல்ல. திருமணத் திற்கு முன்பு தவறுகளே நடந்திருந்தாலும், பின்பும் அது தொடராமல் பார்த்துக்கொண்டு, வாழ்க்கையை முன்னோக்கித்தான் கொண்டு செல்லவேண்டும். மாறாக அதை காரணங்காட்டி திருமண பந்தத்தை விலக்கிக் கொள்வதால் எந்த பலனும் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. பெண்ணை குறை சொல்லும்போது, அதே ஆணை நோக்கி, ‘அதை நீங்கள் முன்பே விசாரித்து திருமணம் செய்திருக்கலாமே. திருமணம் செய்துவிட்டு ஏன் குறை சொல்லிக்கொண்டிருக் கிறீர்கள்’ என்ற கேள்வி எழுப்பப்படும். அதனால் நடந்தது நடந்ததுதான். அதை யாராலும் மாற்ற முடியாது. அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கோணத்தில்தான் அந்த பிரச்சினையை அணுகவேண்டும்.

திருமண உறவில் அடியெடுத்து வைத்த பின்பு கணவரை மனைவியும், மனைவியை கணவரும் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் கடந்த கால கறைகள்கூட புனிதமாகி விடும். ஒன்றுபட்ட வாழ்க்கை மூலம் பல்லாண்டு சேர்ந்து வாழ்ந்து அந்த பந்தத்தையே புனிதாக்கிவிடலாம்.

வாழ்க்கை என்பது நாம் கணக்குப்போட்டு வைத்திருப்பதைப் போல அவ்வளவு எளிமையானதல்ல. பல திருப்பங்களைக் கொண்டது. எந்த திருப்பம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. முடிந்துபோன ஒரு விஷயத்தை தோண்டி எடுப்பது அருவருப்பானது.

ஒருசில விஷயங்கள் வெறும் கற்பனையாகவே இருக்கும். கற்பனையான ஒரு விஷயத்திற்காக நிஜ வாழ்க்கையை குழப்பிக்கொள்ள முடியாது. நடந்து முடிந்த விவாகத்தை ரத்து செய்வதை விட, தேவையற்ற விஷயங்களை ரத்து செய்துவிட்டால் வாழ்க்கை நலமாகும்.

நம்முடைய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் திருமண வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சி செய்யலாம். அதற்கு அனுமதிக்காதீர்கள். திருமண வாழ்க்கை உங்களுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது. பல புதிய உறவுகளைத் தந்து வாழ்நாள் வரை துணைக்கு வருவது. சமூகத்தில் ஒரு நல்ல மதிப்பைப் பெற்றுத் தருவது. அதனால் அதற்கு முதலிடம் தரப்பட வேண்டும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு நல்ல எதிர்காலத்தை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

காலம் எவ்வளவோ மாறிவிட்டது. முற்போக்காக சிந்திக்கக்கூடிய சமுதாயம் மலர்ந்துவிட்டது. திருமணமானவர்கள் விவாகரத்தானவர்கள் கூட மறுமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடரு கிறார்கள். அப்படி தொடரும் வாழ்க்கையில் பரந்த மனம் இருக்கவேண்டும். கடந்தகால நெருடல்கள் இருக்கக்கூடாது. இதுதான் வாழ்க்கை என்று தீர்மானித்த பிறகு அதை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.

நிகழ்காலம் என்பது மிக முக்கிய மானது. அதை மகிழ்ச்சியாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் நடந்தவைகளை நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் பாதிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்று விடக்கூடாது.

கணவனின் கடந்தகாலத்தைப் பற்றி மனைவி பெரிதாக சிந்திப்பதில்லை. மனைவியின் கடந்தகாலம் கணவனுக்கு அவ்வப்போது வம்புக்கு இழுக்க வசதியான விஷயமாக அமைந்துவிடுகிறது. இது ஆண்களின் ‘சைக்கோ’ தன்மையைத்தான் தூண்டிவிடுகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் இதை அனுமதிக்கக்கூடாது. திருமண வாழ்க்கையின் நிம்மதியை இதுபோன்ற செயல்கள் சீர்குலைத்துவிடும்.

வாழ்க்கை என்பது நல்ல விஷயங்கள் மட்டும் நடக்கும் களம் அல்ல. நன்மை-தீமை இரண்டும் விளையக்கூடிய பூமி. இதில் சில களைகள் நாம் விதைக்காமலே முளைக்கக்கூடும். அவைகளை களையெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியை வளர்க்க முடியும்.

ரோஜாவிற்கு மரியாதை கொடுத்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும். முட்களை ஒதுக்க கற்றுக்கொள்ளுங்கள்.

“என்னைப் பற்றி முழுவதுமாக தெரிந்து திருமணம் செய்துகொண்ட பின் கடந்தகால கசப்பான விஷயங்களை சொல்லிக்காட்டி என்னை துன்புறுத்துகிறார் கணவர்” என்று பல பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள். அந்த கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுவே நாகரிகம். 

Next Story