நம் கண்முன்னே அழியும் கழுகின் கதை


நம் கண்முன்னே அழியும் கழுகின் கதை
x
தினத்தந்தி 29 Oct 2017 12:15 PM GMT (Updated: 2017-10-29T15:57:28+05:30)

விலங்குகளில் சிங்கம் எப்படி கம்பீர தோற்றம் கொண்டதோ, அதை போன்று பறவைகளில் கழுகுகள் கம்பீரமானவை. வலிமையான அலகு, குத்திக் கிழிக்கும் கூர்மையான நகங்கள், நுண்ணிய பார்வை திறன் போன்றவற்றை கொண்ட கழுகுகள் காண்போரை வியக்க வைக்கும்.

விலங்குகளில் சிங்கம் எப்படி கம்பீர தோற்றம் கொண்டதோ, அதை போன்று பறவைகளில் கழுகுகள் கம்பீரமானவை. வலிமையான அலகு, குத்திக் கிழிக்கும் கூர்மையான நகங்கள், நுண்ணிய பார்வை திறன் போன்றவற்றை கொண்ட கழுகுகள் காண்போரை வியக்க வைக்கும். உலகில் அண்டார்டிகா, ஆஸ்திரேலியா தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் கழுகுகள் காணப்படுகின்றன. இதில் பிணந்திண்ணி கழுகுகளில் 23 இனங்கள் உள்ளன. இதில் 9 வகையான கழுகுகள் இந்தியாவில் காணப்படுகின்றன. பொதுவாக கழுகு இனங்கள் இரையை வேட்டையாடி உண்ணும். ஆனால் பிணந்திண்ணி கழுகுகள் இறந்த உயிரினங்களை மட்டுமே உண்ணும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிணந்திண்ணி கழுகுகள் தமிழகத்தில் நெல்லை, திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் சுதந்திரமாக பறந்து திரிந்தன. ஆனால் இன்றோ இந்த வகை கழுகுகள் அழியும் அபாயத்தில் உள்ளன.

இது குறித்து கழுகுகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அருளகம் அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் கூறுகிறார்:

“இயற்கையின் துப்புரவு பணியாளனாக பிணந்திண்ணி கழுகுகள் விளங்குகின்றன. இந்த வகைகழுகுகள் கூட்டமாக வாழும். காக்கைகளை போல் பகிர்ந்து உண்ணும். பார்சி மற்றும் புத்த மதத்தினரில் ஒருபிரிவினர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல், உயரமான இடத்தில் இந்த கழுகு கூட்டங்களுக்கு உணவாக வைத்து விடுவார்கள். இருளர் இன பழங்குடியின மக்கள் இந்த கழுகுகளை ‘பாறு’ என்று அழைக்கின்றனர். புறநானூறு பாடல்களில் பாறு என்றே இந்த பறவைகள் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வெண் முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு, மஞ்சள் முக கழுகு, செந்தலை கழுகு, ஒல்லி அலகு கழுகு, தாடிக்கழுகு, நீல அலகு கழுகு, இமயமலை கழுகு, யூரோப்பியன் கழுகு ஆகிய 9 வகையான கழுகுகள் உள்ளன. இதில் தாடிக் கழுகு என்று அழைக்கப்படும் லேமர் கியர் கழுகுகள் விலங்குகளின் எலும்பை கூட சாப்பிடும் அளவுக்கு வல்லமை கொண்டது.

தமிழகத்தில் வெண் முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு, மஞ்சள் முக கழுகு, செந்தலை கழுகு வகைகள் மட்டுமே காணப்படுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கழுகுகளை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பார்க்க முடிந்தது. கோவையில் காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக காணப்பட்டது. சென்னை குரோம்பேட்டையில் கடந்த 1951-ம் ஆண்டு நூற்றுக்கணக்கான பிணந்திண்ணி கழுகுகள் இருந்துள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கழுகுகளை குறிக்கும் வகையில் கழுகுமலை, கழுகுப்பாறை, கழுகுமொட்டை என பல்வேறு பெயர்களில் ஊர்கள் உள்ளன. ஆனால் தற்போது இந்த பிணந்திண்ணி கழுகுகளை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியை தவிர்த்து வேறு எங்கும் காண முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மிக குறுகிய காலத்திலேயே இந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக இறந்து இன்று அழிவின் விளிம்புக்கு சென்று விட்டன.இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், ஈரான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை கழுகுகள் அதிக எண்ணிக்கையில் இறந்தன. கழுகுகள் ஏன் கொத்துக்கொத்தாய் அழிந்தன என்பது பற்றி 1998-ம் ஆண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. அப்போது மாடுகளுக்கு போடப் படும் ‘டைக்குளோபினாக்’ எனப்படும் ஒரு வகையான வலி நிவாரண மருந்தால், இந்த கழுகுகள் இறப்பது கண்டறியப்பட்டது. இந்த மருந்து போடப்பட்ட மாடுகள் இறந்ததும், அதனை கூட்டமாக பிணந்திண்ணி கழுகுகள் தின்கின்றன. அந்த கழுகுகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மொத்தமாக இறந்தது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இதுபோன்ற மருந்துகளை மாடுகள் உள்ளிட்ட கால்நடை களுக்கு போட அரசு தடை விதித்து உள்ளது. மேலும் இந்தியா தவிர்த்து பாகிஸ்தான், ஈரான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளும் இந்த மருந்தை தடை செய்தன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் பகுதியில் மட்டுமே 300 என்ற சொற்ப எண்ணிக்கையில் இந்த கழுகுகள் உள்ளன. இதிலும் மஞ்சள் முக கழுகு, செந்தலை கழுகு ஆகிய கழுகு வகைகள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே காணப்படுகின்றன. வெண் முதுகு கழுகு மட்டும் 150-க்கும் சற்று அதிகமாக உள்ளன.

பொதுவாக கழுகுகள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டதாக இருந்தாலும், வருடத்துக்கு 1 முட்டை மட்டுமே இடும். மேலும் குஞ்சு வளர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட 4 முதல் 7 ஆண்டுகள் வரை பிடிக்கும். இதன்காரணமாக இந்த கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. நன்கு வளர்ந்த ஒரு கழுகு ஒரு தடவை 4 கிலோ வரை இறைச்சி தின்னும். இந்த கழுகின் இறக்கைகள் இருபுறமும் 7 அடி வரை கூட நீளம் கொண்டதாக காணப்படும்” என்றார்.

இது குறித்து பறவை ஆர்வலர்கள் ஒருவர் தரும் தகவல்:

“உலகம் முழுவதும் 1,200 வகையான உயிரினங்கள் அழிவின் பிடியில் உள்ளன. இதில் இந்தியாவின் இமயமலை காடை மற்றும் காட்டு ஆந்தை ஆகியவை சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பல லட்சம் பிணந்திண்ணி கழுகுகள் காணப்பட்டன. தற்போது இந்த பறவை அழிவை சந்தித்து வருகிறது. நம் கண்முன்னே அழியும் நிலையில் உள்ள இந்த பறவை இனத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புலி இனம் அழிவின் பிடியில் சிக்கியது. மத்திய, மாநில அரசுகளின் கடும் நடவடிக்கை காரணமாக வனச்சரணாலயங்கள் புலிகள் காப்பகங்களாக மாற்றப்பட்டு, இன்று புலி இனம் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

பிணந்திண்ணி கழுகுகள் இல்லை என்றால் என்னவாகும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு, துப்புரவு தொழிலாளி இல்லை என்றால் குடியிருப்புகள் என்னவாகும் என்பதே பதில். இந்த வகை கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்தால் இறந்த விலங்குகள் மூலம் தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படும். இந்த கழுகுகளை பாதுகாக்க ‘டைக்குளோபினாக்’ மருந்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இந்த பறவைகளை வேட்டையாடுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. எனவே அரசு மனது வைத்தால் இந்த பறவைகளை மீட்டெடுக்க முடியும்” என்றார். 

Next Story