திருச்செந்தூர் அருகே, ஸ்கூட்டரில் சென்ற தலைமை ஆசிரியையை வழிமறித்து தாக்கி 17½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு


திருச்செந்தூர் அருகே, ஸ்கூட்டரில் சென்ற தலைமை ஆசிரியையை வழிமறித்து தாக்கி 17½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2017 2:00 AM IST (Updated: 31 Oct 2017 7:25 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற தலைமை ஆசிரியையை வழிமறித்து தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 17½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற தலைமை ஆசிரியையை வழிமறித்து தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 17½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

தலைமை ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிப்பத்து எருசலேம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி அன்னமேரி(வயது 48). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள மேலகானம் ஆர்.சி. தொடக்கப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் மதியம் திருச்செந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு தனது ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் மாலையில் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.

வழிகேட்பது போல்...

திருச்செந்தூர் கிருஷ்ணா நகரை கடந்து சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் அன்னமேரியிடம், சாத்தான்குளத்துக்கு இந்த வழியாக செல்லலாமா? என்று வழிகேட்பது போன்று நைசாக பேச்சு கொடுத்தனர்.

அவர்கள் உண்மையிலேயே வழிதான் கேட்கிறார்கள் என்று எண்ணிய அன்னமேரியும் இந்த வழியாக சாத்தான்குளத்துக்கு செல்லலாம் என்று அவர்களிடம் கூறி விட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

வழிமறித்து தாக்கினர்

அவர் காட்டுப்பகுதி வழியாக ஸ்கூட்டரில் சென்றுகொண்டு இருந்தபோது, அவரிடம் வழி கேட்ட மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் வேகமாக வந்து அன்னமேரியின் ஸ்கூட்டரை முந்திச்சென்றனர். சிறிது தூரம் சென்று விட்டு பின்னர் மீண்டும் அவருக்கு எதிரில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம மனிதர்களும் வந்தனர்.

இதனால் அன்னமேரி சுதாரிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் திடீரென்று அன்னமேரியின் அருகில் வந்து அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அன்னமேரியிடம், நீங்கள் எங்களுக்கு தவறான வழியை காண்பித்து விட்டீர்கள் என்று கூறினர்.

17½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று அன்னமேரி கழுத்தில் அணிந்து இருந்த 17½ பவுன் தாலி சங்கிலியை இழுத்து பறிக்க முயன்றார். ஆனால் தங்க சங்கிலி உறுதியாக இருந்ததால், அது அறுபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அன்னமேரியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலியை பறித்துக்கொண்டனர்.

பின்னர் மின்னல் வேகத்தில் மர்ம மனிதர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் தாக்கியதில் அன்னமேரிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போலீசார் வலைவீச்சு

நகையை பறிகொடுத்த அன்னமேரி இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியையிடம் நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.

திருச்செந்தூர் அருகே பட்டப் பகலில் தலைமை ஆசிரியையை தாக்கி அவர் அணிந்து இருந்த 17½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story