கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேட்டி


கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 31 Oct 2017 11:50 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

திருப்புவனம்,

திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழடி. இங்கு மத்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. முதற்கட்ட அகழாய்வில் 4 ஆயிரத்து 125 பொருட்களும், 2–ம் கட்ட பணியில் ஆயிரத்து 890 பொருட்களும், 3–ம் கட்ட பணியில் ஆயிரத்து 500 பொருட்கள் என 7 ஆயிரத்து 515 பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் ஆயிரத்து 200 பொருட்கள் ஆராய்ச்சிக்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற பொருட்கள் கீழடியில் உள்ள சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மாபா பாண்டியராஜன் வந்திருந்தார். அப்போது 3–ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமனிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:–

தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பின்பு அரசு சார்பில் 39 அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மத்திய தொல்லியல் துறை சார்பில் 41 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வு பணிகள் மூலம் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், அழகன்குளம் ஆகியவை பிரசித்தி பெற்றுள்ளன. இவற்றைபோல் கீழடி அகழாய்வும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கீழடியிலேயே 4–ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த அகழாய்வு பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

4–ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்தபின்னர் மொத்தம் 10 ஆயிரம் பொருட்களுடன் ஒருங்கிணைந்த தமிழரின் வரலாறு, அவர்களின் கலாசாரம், தொழில், பண்பாடு உள்ளிட்டவை குறித்த புதிய கருத்து உருவாக்கப்பட உள்ளது. கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு, ரூ.1 கோடி செலவில் அதற்கான கட்டிடம் கட்டப்படும். அதன்பிறகு மொகஞ்சதாரோ, ஹரப்பா பண்பாடு குறித்து மாணவ–மாணவிகள் வரலாற்று பாடங்களில் படிப்பது போன்று, கீழடி குறித்தும் பாடப்புத்தங்களில் படிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடம் தேர்வு குறித்து பார்வையிட்டார். உடன் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் புவனேந்திரன், தாசில்தார் கமலா உள்ளிட்டோர் இருந்தனர்.


Next Story