சிறுமழைக்கே தாங்காத சிங்கம்புணரி–மேலூர் சாலை


சிறுமழைக்கே தாங்காத சிங்கம்புணரி–மேலூர் சாலை
x
தினத்தந்தி 1 Nov 2017 4:00 AM IST (Updated: 31 Oct 2017 11:50 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் கடந்த 2 தினங்களாக அவ்வப்போது விட்டுவிட்டு பெய்த மழையால் அரிப்பு எடுத்த சிங்கம்புணரி–மேலூர் சாலை குண்டும்குழியுமாக மாறியது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்பியுள்ளனர். அதற்கு ஏற்றவாறு தற்போது சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. இந்தநிலையில் சில தினங்களாக பெய்து வரும் மழையால் அகலப்படுத்தப்பட்ட நான்கு ரோட்டில் இருந்து மேலூர் செல்லும் சாலை அரித்து போய் தரமற்ற சாலையாக ஆங்காங்கே குண்டும்குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் சாலையின் பள்ளங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக இருக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.

குண்டும், குழியுமான சாலையால் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் அரங்கேறி வருகின்றன. தற்போது சாலை குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்லும்போது சாலையில் நடந்து செல்வோர் மீது சேற்றை வாரி இரைத்தார்போல அவர்கள் மீது தண்ணீர் விழுகிறது. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சிங்கம்புணரி–மேலூர் சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள் இந்த சாலை வழியாகவே சைக்கிளில் சென்று வருகின்றனர். சேதமான சாலையால் அவர்கள் தினசரி அவதியுற்று வருகின்றனர்.

இதுகுறித்து சிங்கம்புணரியை சேர்ந்த கண்ணன் என்பவர் கூறும்போது, சிங்கம்புணரி–மேலூர் சாலையானது தற்போது நான்கு ரோடு பகுதியில் இருந்து சந்திவீரன்கூடம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. சேதமான ரோட்டில் மழைநீரும் தேங்கியிருப்பதால், அதனுடன் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது. சாலையின் இருபுறங்களிலும் உள்ள கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கினாலே மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருக்கும். எனவே சாலைகளை சீரமைப்பதுடன், கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story