கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் பீடம் கட்டியதால் பரபரப்பு
கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் பீடம் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்,
கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலையோரத்தில், கம்பம் நகரில் அரசமரம் பகுதியில் முத்தாலம்மன் கோவில் இருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, கடந்த 2010–ம் ஆண்டு அந்த கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து விட்டனர். கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, முத்தாலம்மன் கோவிலில் 2 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
தற்போது பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. முத்தாலம்மன் கோவில் இடிக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக சாலையோரத்தில் கொட்டகை அமைத்து வழிபாடு செய்தனர். இந்தநிலையில் கோவில் திருவிழாவுக்காக சாலையோரத்தில் நேற்று முன்தினம் கொட்டகை அமைத்திருந்தனர்.
இதுமட்டுமின்றி கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் பக்தர்கள் கான்கிரீட்டால் பீடம் கட்டினர். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதேபோல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணன், உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் விரைந்தனர். திருவிழா நடத்துகிற பக்தர்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திருவிழா முடிந்ததும் பீடத்தை அகற்றி கொள்வதாக, முத்தாலம்மன்கோவில் கமிட்டி தலைவர் குமரேஷிவரர் உறுதி அளித்தார். இதையடுத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் அங்கிருந்து சென்று விட்டனர்.