உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் பணத்தை திருப்பிக்கொடுக்காத தம்பதி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் பணத்தை திருப்பிக்கொடுக்காத தம்பதி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:00 AM IST (Updated: 1 Nov 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் பணத்தை திருப்பிக்கொடுக்காத தம்பதி மீது பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உமாவிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

உடுமலை கணக்கம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார்–வெங்கடேஷ்வரி தம்பதி ஏலச்சீட்டு நடத்தினார்கள். அவர்களிடம் எங்கள் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு பணம் செலுத்தி வந்தோம். சீட்டு பணம் முழுமையாக செலுத்திய பின்னர் முதிர்வு தொகையை தராமல் இழுத்தடித்தனர். பணத்தை நாங்கள் திருப்பிக்கேட்டால் ‘உங்கள் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று முத்துக்குமார்–வெங்கடேஷ்வரி ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

இதுபோல் அந்த பகுதியை சேர்ந்த பலரும் பணம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். சீட்டு பணத்தை வசூலித்து கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளனர். ஆண்கள் சென்று பணத்தை கேட்டால், ‘வெங்கடேஷ்வரி மூலமாக பாலியல் புகார் கொடுப்பேன்’ என்று முத்துக்குமார் மிரட்டுகிறார். பலரிடம் பல லட்சம் வசூலித்து பணத்தை திரும்ப கொடுக்காமல் உள்ளனர். அவர்களிடம் இருந்து எங்கள் பணத்தை வசூலித்துக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு உமா உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து சென்றனர்.


Next Story