பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 178 பள்ளிகள் தயார்
திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 178 பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது–
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து அதனை சமாளிக்கும் பொருட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பருவமழையால் மிக அதிக அளவில் பாதிப்புக்கு உட்படும் 18 இடங்களும் மிகஅதிகளவில் பாதிப்புக்கு உட்படும் 74 இடங்களும் மிதமாக பாதிப்புக்குட்படும் 64 இடங்களும் குறைந்த அளவில் பாதிப்புக்கு உட்படும் 44 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளை உரிய முறையில் கண்காணித்து பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் மற்றும் பகுதிகளுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்குவதற்கு துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய 60 மண்டல குழுக்கள் மற்றும் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் 38 மாற்று மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பேரிடர் சமயங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 5 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், 4 புயல் பாதுகாப்பு மையங்களும், 178 தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீட்பு பணிக்காக நன்கு நீச்சல் தெரிந்த 145 நபர்களும், 11 படகுகளும், இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை போன்ற துறைகள் மூலம் தயார் நிலையில் உள்ளது.
மேலும் மணல் மூட்டைகள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 271–ம் சவுக்கு கம்புகள் 6 ஆயிரத்து 226, மரம் அறுக்கும் எந்திரம் 108, நீர்வெளியேற்றும் மோட்டார்கள் 141, ஜெனரேட்டர்கள் 164, குடிநீர் லாரிகள் 20, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் 2 ஆயிரத்து 401, பிளீச்சிங் பவுடர் 121 மெட்ரிக் டன் அளவில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது வரை வடகிழக்கு பருவமழை தொடர்பாக 37 புகார்கள் வந்துள்ளது. அவற்றில் 35 புகார்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2 புகார்களும், விரைவில் முடிக்கப்படும். பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 178 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு தேவையான வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.