2010–ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். சேர்ந்தவர்களும் கிராமப்புற ஆஸ்பத்திரிகளில் சேவை புரிய வேண்டும்
மராட்டியத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். முடித்து வெளியே வரும் டாக்டர்கள், ஓராண்டு கிராமப்புறங்களில் தங்கியிருந்து சேவைபுரிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். முடித்து வெளியே வரும் டாக்டர்கள், ஓராண்டு கிராமப்புறங்களில் தங்கியிருந்து சேவைபுரிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. எனினும், கடந்த 2005–ம் ஆண்டு முதல் 2012–ம் ஆண்டு வரை மருத்துவம் பயின்று வெளியே வந்த மாணவர்களில், 4 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டோர், இந்த உத்தரவை பின்பற்றவில்லை. இதனால், அவர்களது மருத்துவப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2010–ம் ஆண்டுக்கு பின்னரும் எம்.பி.பி.எஸ். முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், ஏற்கனவே கிராமப்புறங்களில் சேவையாற்ற தவறியவர்களுக்கு மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மருத்துவக்கல்வி மந்திரி கிரிஷ் மகாஜன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கிராமப்புறங்களில் சேவைபுரியும் டாக்டர்களுக்கு அதிகப்படியான ஊதியமும், சலுகைகளும் அளிக்கப்படுகின்ற போதிலும் அவர்கள் பின்வாங்குவது வேதனைக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.