பா.ஜனதா– சிவசேனா மோதல் மராட்டிய அரசை முடக்கி விட்டது


பா.ஜனதா– சிவசேனா மோதல் மராட்டிய அரசை முடக்கி விட்டது
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா– சிவசேனா இடையிலான மோதல் மராட்டிய அரசை முடக்கி விட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் குற்றம்சாட்டினார்.

மும்பை,

பாரதீய ஜனதா தலைமையிலான மராட்டிய அரசு நேற்றுடன் 3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பா.ஜனதா– சிவசேனா இடையே நிலவும் மோதல் போக்கு மராட்டிய அரசை முழுவதுமாக முடக்கி விட்டது. அரசை விமர்சிப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சிவசேனா நழுவ விடாததால், நிர்வாகத்தின் நம்பகத்தன்மை மீது பலத்த அடி விழுந்துவிட்டது. அரசில் இருந்து வெளியே வரவும் அக்கட்சிக்கு துணிச்சல் இல்லை.

பா.ஜனதா– சிவசேனா இடையே ஆன தொடர்ச்சியான சச்சரவினால், சர்வதேச அளவில் மாநிலத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டதுடன், அன்னிய முதலீட்டையும் பாதித்துவிட்டது. பா.ஜனதா தலைமையிலான அரசின் மிகப்பெரிய தோல்வி, ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை. இதன் ஒட்டுமொத்த நோக்கமும் தோல்வி கண்டது.

பயிர்க்கடன் தள்ளுபடி பற்றிய அரசின் உத்தரவாதம் போலியானது என்பது நிரூபணம் ஆகிவிட்டது. ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதன்பின்னர், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, இறுதியாக வினியோகிக்கப்படும் தொகையின் அளவு மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. இந்த வி‌ஷயத்தில் அரசு அகப்பட்டதை அறிந்ததும், வங்கிகள் தவறான கணக்கீடுகளை அளித்துவிட்டதாக வங்கிகள் மீது பழி போடுகிறார்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘மேக் இன் மகாராஷ்டிரா’ திட்டங்கள் வெற்று கோ‌ஷங்கள் ஆகிவிட்டன. வெறும் அறிவிப்புகள் தான் வெளியிடப்படுகின்றன. ஒன்றையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார்.


Next Story