சத்தியமங்கலம் அருகே கல்லால் தாக்கி பேராசிரியை கணவர் படுகொலை
சத்தியமங்கலம் அருகே கல்லால் தாக்கி பேராசிரியை கணவர் படுகொலை செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (வயது 33). டிரைவர். இவருடைய மனைவி ஏஞ்சலின் (30). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்னிதா (6) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் ஒன்றில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலத்தை அடுத்த சபரி காலனி அருகே கே.என்.பாளையம் ரோட்டில் தலையில் பலத்த காயத்துடன் விஸ்வநாதன் இறந்து கிடப்பதாக அவருடைய மனைவி ஏஞ்சலினுக்கு தகவல் கிடைத்தது. உடனே ஏஞ்சலின் மற்றும் அவருடைய உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஸ்வநாதனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஸ்வநாதனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது, ‘விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், அவருடைய மோட்டார்சைக்கிள் கிடந்தது. மேலும் அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் தரைப்பாலம் பகுதியில் ரத்தக்கறை படிந்த கல் கிடந்தது. அதுமட்டுமின்றி அங்கு மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட் ஆகிய பொருட்கள் கிடந்தததையும்,’ பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘கார், சுற்றுலா வேன் போன்ற வாகனங்களுக்கு விஸ்வநாதன் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்து உள்ளார். எனவே அவர் வாகனங்கள் வைத்திருக்கும் யாராவது அழைத்தால் அதனை ஓட்ட சென்றுவிடுவார். அதன்படி வாகனத்தை ஓட்டிவிட்டு வீட்டுக்கு வரும்போது நண்பர்களுடன் தரைப்பாலம் பகுதியில் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது,’ தெரியவந்தது.
இதையடுத்து விஸ்வநாதனின் உடலை போலீசார் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘விஸ்வநாதனை கொலை செய்தவர்கள் பிணத்தை தூக்கி கொண்டு வந்து கே.என்.பாளையம் ரோட்டில் வீசி சென்றார்களா? அல்லது குற்றுயிராக கிடந்த அவர், தன்னுடைய மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டி வந்தபோது, தொடர்ந்து ஓட்ட முடியாமல் விழுந்து இறந்து போனாரா?’ என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி அங்கும், இங்குமாக சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பேராசிரியை கணவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.