கடலூர், திருவண்ணாமலையில் மழைக்கு 4 பேர் பலி


கடலூர், திருவண்ணாமலையில் மழைக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

கடலூர்,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள பில்லாலிதொட்டி பெரிய காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 50) தொழிலாளி. இவரது மனைவி லதா(38). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று காலை லதா வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அருகில் உள்ள வீட்டின் சுவர் திடீரென இடிந்து லதா மீது விழுந்தது. இதில் லதா உயிரிழந்தார்.

கடலூர் அருகே எம்.புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (35). இவர் நேற்று வீட்டில் துணியை துவைத்து காயவைப்பதற்காக மாடிக்கு சென்றார். பின்னர் துணியை அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றில் போட்டபோது, தவறுதலாக அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது துணி விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொளத்தங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராமசாமி (45). இவர் ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஸ்ரீமுஷ்ணம்- வக்காரமாரி சாலையில் ஏரிக்கரையில் உள்ள மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டது.

இதையடுத்து ராமசாமி மற்றும் அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் ஏரிக்கரைக்கு வந்து மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் மனைவி சத்யா, மகள்கள் நித்யா (13), ஆனந்தி (11), தந்தை பாக்கியநாதன் (60) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

மழை காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த இடிபாடுகள், தூங்கிக்கொண்டிருந்த நித்யா, ஆனந்தி, பாக்கியநாதன் ஆகியோர் மீது விழுந்தது. இதனால் அவர்கள் கூக்குரலிட்டனர். இதனையடுத்து வேல்முருகன்-சத்யா ஆகியோர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து வரவழைத்தனர்.

பின்னர் 3 பேரையும் அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் நித்யா மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். பலியான நித்யா, ஆரணி அருகே கல்பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். 

Next Story