தஞ்சை அருகே 2 பஸ்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணு ஆறுதல்


தஞ்சை அருகே 2 பஸ்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணு ஆறுதல்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே 2 பஸ்கள் மோதிய விபத்தில் காயம்அடைந்தவர்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணு ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த பணத்தில் இருந்து நிதி உதவியும் வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் நேற்று 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பஸ் டிரைவர்கள், 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 48 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மருத்துவகல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் துரைக்கண்ணு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரமும் ,பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், கல்லூரி மாணவி ஒருவருக்கு ரூ.5 ஆயிரமும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.2ஆயிரமும் என தனது பணத்திலிருந்து நிதியுதவி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில், “அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயம் அடைந்த சிகிச்சை பெற்று வருகிறார்கள். போர்க்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கலெக்டரின் பரிந்துரையின் படி அரசுக்கு அறிக்கை அனுப்பி அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் நிவாரணம் வழங்குவார். வடகிழக்கு பருவ மழையினை விவசாயிகள் சம்பா பருவத்திற்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்”என்றார்.

அமைச்சருடன், பரசுராமன் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சூரியநாராயணன், தஞ்சை மருத்துவகல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன், கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.


Related Tags :
Next Story