நடிகை அமலாபாலின் சொகுசு காரை பதிவு செய்ததில் ஊழல் நடக்கவில்லை; அமைச்சர் ஷாஜகான் பேட்டி
நடிகை அமலாபாலின் சொகுசு காரை பதிவு செய்ததில் ஊழல் நடைபெற வில்லை என அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி போக்குவரத்து துறையில் திரைப்பட நடிகை அமலா பால் கார் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக மாயை ஏற்படுத்தி வருகின்றனர். அவர் கர்நாடக மாநிலத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அதை தற்காலிக பதிவுக்கு 8.8.17ல் சமர்ப்பித்துள்ளனர். போக்குவரத்துத்துறை சட்டவிதிகள் படி ஒருவர் ஒருவாகனத்தை பதிவு செய்ய ஆதாரங்கள் தரவேண்டும். வாக்காளர் அட்டை, எல்.ஐ.சி., பாலிசி, பாஸ்போர்ட், பள்ளி சான்று, பிறப்பு சான்று, அபிடவிட் ஆகியவை தாக்கல் செய்யலாம்.
இது இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய அபிடவிட்டை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிட சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்.ஐ.சி. பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்துள்ளார். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். அதற்கு போக்குவரத்து விதிப்படி தடையில்லை. கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவு எண் பெற்று புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறொரு மாநிலத்துக்கு சென்றால் அந்த மாநிலத்தில் பதிவு எண் பெற ஓராண்டுக்கு கால அவகாசம் உள்ளது.
தற்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் தலைமையில் போலீஸ் குழு இருப்பிடத்தை சென்று விசாரித்தனர். அதில் தவறு இல்லை என்று தெரிந்தது. துறை ரீதியாக ஊழல் தவறு நடக்கவில்லை. சட்டரீதியாக நடந்துள்ளது. கேரள அரசு தகவல் கேட்டால் தர தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கேட்கவில்லை. இதில் தவறே நடக்கவில்லை. விதிமுறைப்படிதான் நடந்துள்ளது.
ஓராண்டுக்குள் பதிவு எண் பெறாவிட்டால் அந்த மாநிலம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். கவர்னர் தவறு நடந்ததாக எதை கூறுகிறார். ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்து வருகிறோம். ஒரு வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கவர்னர் எந்த நோக்கில் குற்றம் சாட்டினார் என தெரியவில்லை. அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அமலாபால் வாகனம் பதிவு செய்து 2½ மாதங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் 8 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது.
புதுச்சேரியில் வரி குறைவு என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரோல், டீசல், மதுபானங்கள் இங்கு விலை குறைவு. மாநில வருவாய்க்காக வரியை குறைத்து வைத்துள்ளோம். அதில் தவறு இல்லை. வரி உள்ளூர், வெளியூர் என்று இல்லை. வரியை நிர்ணயிக்க அரசுக்கு சுதந்திரம் உள்ளது.
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு. அதன் விற்பனை அதிக அளவு உள்ளது. வெளிமாநில வாகனங்களும் இங்கு வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். அது தவறு என கூற இயலாது. போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. நடிகை அமலாபால் விவகாரத்தில் இன்னும் 15 நாட்களுக்குள் துறை சார்பில் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
மாதந்தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 650 கார்களும் பதிவு செய்யப்படுகின்றன. ஆம்னி பஸ்களுக்கு ஒரு சீட்டுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருக்கைக்கு ரூ. 1,200 செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது போக்குவரத்து துறை ஆணையர் சுந்தரேசன் உடனிருந்தார்.