கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
கர்நாடகத்தின் புதிய தலைமை போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட மூத்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ நேற்று பதவி ஏற்று கொண்டார்.
பெங்களூரு,
கர்நாடகத்தின் புதிய தலைமை போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட மூத்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ நேற்று பதவி ஏற்று கொண்டார். நேற்றுடன் பணி ஓய்வுபெற்ற தலைமை போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா, புதிய தலைமை போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதன்மூலம் கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் டி.ஜி.பி. என்ற பெருமையை நீலமணி ராஜூ பெற்றார்.
கர்நாடக தலைமை போலீஸ் டி.ஜி.பி.யாக ஆர்.கே.தத்தா பணியாற்றி வந்தார். இவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக, கர்நாடகத்தின் புதிய தலைமை போலீஸ் டி.ஜி.பி.யாக யாரை நியமிப்பது? என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டியுடன் தீவிரமாக ஆலோசித்து வந்தார்.இதில், நீலமணி ராஜூ 1983–ம் ஆண்டும், கிஷோர் சந்திரா மற்றும் எம்.என்.ரெட்டி ஆகியோர் 1984–ம் ஆண்டும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பணிக்கு சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால், பணி மூப்பு அடிப்படையில் நீலமணி ராஜூ கர்நாடகத்தின் தலைமை டி.ஜி.பி.யாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகத்தின் புதிய தலைமை டி.ஜி.பி. யார் என்பதை முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்தார். கர்நாடகத்தின் புதிய தலைமை டி.ஜி.பி.யாக நீலமணி ராஜூவை நியமிப்பதாக அவர் தெரிவித்தார். இதன்மூலம், கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் டி.ஜி.பி. என்ற பெருமை நீலமணி ராஜூவை வந்தடைந்தது. அவருக்கு முதல்–மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி, மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பின்னர், நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று மாலையில் நடந்த விழாவில் தலைமை டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா பணி ஓய்வு பெற்றார். பின்னர், அவர் தனது பொறுப்புகளை புதிய தலைமை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட நீலமணி ராஜூவிடம் ஒப்படைத்தார்.