தமிழகத்தில், கட்டுமான பணிகள் சீராக நடைபெற வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவேண்டும்


தமிழகத்தில், கட்டுமான பணிகள் சீராக நடைபெற வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவேண்டும்
x
தினத்தந்தி 2 Nov 2017 2:15 AM IST (Updated: 1 Nov 2017 8:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில், கட்டுமான பணிகள் சீராக நடைபெற வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவேண்டும் என்று முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

நெல்லை,

தமிழ்நாட்டில், கட்டுமான பணிகள் சீராக நடைபெற வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவேண்டும் என்று முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

மணல் இறக்குமதி

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் இருந்து மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனால் கட்டுமான தொழிலுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை தவிர்க்கவும், கட்டுமான பணிகள் சீராக நடைபெறுவதற்கும் தமிழக அரசு வியட்நாம், மலேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும்.

ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்து உள்ள மணலை வெளியே எடுக்க அரசு தடை விதித்து இருப்பது, மணல் கடத்தல் கும்பலுக்கு உறுதுணையாக இருப்பது போல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டில் இருந்து வந்த மணலை உடனே வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதால் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கும். எனவே அரசே அந்த மணலை கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.94–ம், வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.155–ம் உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பாரதீய ஜனதா ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். முன்பு மத்திய அரசு சிலிண்டர் விலையை உயர்த்தியபோது அப்போது தமிழகத்தில் இருந்த தி.மு.க. அரசு மானியம் வழங்கியது. அதேபோல் தற்போதும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்.

சரக்கு சேவை வரி

சரக்கு சேவை வரியால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை மத்திய அரசு வரைமுறை செய்யவேண்டும். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் குப்பை அள்ளுவதற்கு வரி விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இந்த வரி விதிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும். இல்லை எனில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். கந்து வட்டி கொடுமையால் இசக்கிமுத்து தற்கொலை செய்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நெல்லை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.பி.துரை, முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதி சிவன், சிறுபான்மை பிரிவு தலைவர் அந்தோணி செல்வராஜ், ஜேம்ஸ்போர்டு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story