நெல்லை மாவட்டத்தில் தொடரும் பருவமழை: நம்பியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு


நெல்லை மாவட்டத்தில் தொடரும் பருவமழை: நம்பியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
x
தினத்தந்தி 2 Nov 2017 2:00 AM IST (Updated: 1 Nov 2017 8:50 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நம்பியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.

தொடரும் பருவமழை

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் விடிய, விடிய லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது. அம்பை, நாங்குநேரி, வள்ளியூர், கடையநல்லூர் பகுதிகளில் மிதமான மழையும், நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம் பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1734.83 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 504.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 72.50 அடி உயரத்தில் இருந்து 74.45 அடியாக உயர்ந்தது.

நம்பியாறு அணை

சேர்வலாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் 84.77 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87.40 அடியாக அதிகரித்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 893 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

மணிமுத்தாறு அணையில் குளிக்க தடை

மணிமுத்தாறு அணை பகுதியில் 57 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. அணைக்கு 509 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நம்பியாறு அணை ஒரேநாளில் 10 அடி உயர்வு

நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதியான களக்காடு, வள்ளியூர், நாங்குநேரி, நம்பியாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நம்பியாறு அணைப்பகுதியில் நேற்று 121 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் 6.62 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 16.62 அடியாக உள்ளது.

கடனா–ராமநதி

இதேபோல் கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 61.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 58.75 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 56.76 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 99.50 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 33.75 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 51.75 அடியாகவும், இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை மணியுடன் முடிவடைந்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:–

மழை அளவு

நம்பியாறு–121, மணிமுத்தாறு–57, கொடுமுடியாறு–50, கருப்பாநதி–38, நாங்குநேரி–24, சிவகிரி–16, சேர்வலாறு–12, பாபநாசம்–10, சேரன்மாதேவி–8, தென்காசி–8, அம்பை–7, ராதாபுரம்–3, நெல்லை–2, பாளையங்கோட்டை–1, அடவிநயினார்–1.


Related Tags :
Next Story