டெங்கு காய்ச்சலால் மாணவி பலி
ராமநாதபுரம் அருகே டெங்கு காய்ச்சலால் மாணவி பலியானார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள ரமலான்நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி என்பவரின் மகள் உம்முல்கிபாயா (வயது10). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவியை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உம்முல்கிபாயா பரிதாபமாக உயிரிழந்தார். மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது வைரஸ் காய்ச்சல் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், ரத்ததில் தட்டை அணுக்கள் கணிசமான அளவு இருந்தும் இறந்துள்ளதால் இதுகுறித்து முழு விவரங்களை கேட்டுள்ளதாகவும், அவை வந்தவுடன் தான் எந்த வகையான காய்ச்சல் என்று தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.