கோவையில் திடீரென்று மாயமான வருமானவரித்துறை துணை கமி‌ஷனர் பர்கூரில் மீட்பு


கோவையில் திடீரென்று மாயமான வருமானவரித்துறை துணை கமி‌ஷனர் பர்கூரில் மீட்பு
x
தினத்தந்தி 2 Nov 2017 4:30 AM IST (Updated: 2 Nov 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் திடீரென்று மாயமான வருமான வரித்துறை துணை கமி‌ஷனர் பர்கூரில் மீட்கப்பட்டார். அவரை உறவினர்கள் சென்னை அழைத்துச்சென்றனர்.

கோவை,

தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி செண்பகராமனின் மகன் சிவக்குமார் (வயது 38). கடந்த 2008–ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். படித்து முடித்துவிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் துணை கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பீளமேடு சேரன்மாநகர் கவுதமபுரி பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 13–ந்தேதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சிவக்குமார் திடீரென்று மாயமாகி விட்டார்.

அவர் வீட்டைவிட்டு செல்லும்போது ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, செல்போன் மற்றும் அடையாள அட்டைகளை வீட்டில் வைத்துவிட்டு, ரொக்கம் ரூ.15 ஆயிரம் மற்றும் துணிமணிகளை ஒரு சூட்கேசில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து சிவக்குமாரின் குடும்பத்தினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்கூரை அடுத்த அச்ச மங்கலம் என்ற கிராமத்தில் ஊர்க்காவல்படை வீரர் ஒருவரது வீடு அருகே சோர்வான நிலையில் ஒரு நபர் அமர்ந்திருந்தார்.

அவரிடம் அந்த ஊர்க்காவல்படை வீரர் விசாரித்தபோது, அவர் சிவக்குமார் என்பதும், கோவை வருமானவரித்துறையில் துணை கமி‌ஷனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் பர்கூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரை மீட்டனர்.

அத்துடன் அவர் மிகவும் சோர்வான நிலையில் இருந்ததால், அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிவக்குமார் மீட்கப்பட்டது குறித்து அவருடைய உறவினருக்கு பர்கூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவக்குமாரை சென்னையில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். சிவக்குமார் திடீரென்று மாயமானது ஏன் என்பது தெரிய வில்லை. அவர் கோவையில் இருந்து எங்கு சென்றார்? பர்கூருக்கு வந்தது எப்படி? நடந்து சென்றாரா அல்லது யாரும் காரில் கடத்திச்சென்று, அங்கு விட்டுவிட்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story