திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் கழிவுநீர் சென்றதால் பரபரப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை


திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் கழிவுநீர் சென்றதால் பரபரப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் நுரை நுரையாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது. ஆனால் தற்போது சாக்கடை கழிவுகள் ஓடும் ஆறாக மாறி வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய ஆலைகள் அவ்வப்போது முறைகேடாக சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டு விடுகின்றன. இதனால் நீராதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே முறைகேடாக சாயக்கழிவுநீரை திறந்து விடும் நிறுவனங்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில நிறுவனங்கள் முறைகேடாக சாயக்கழிவுநீரை திறந்து விட்டன. இதைத்தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, முறைகேடு நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்தல், சீல் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அவ்வப்போது முறைகேடாக இயங்கும் பல நிறுவனங்கள் தொடர்ந்து மறைமுகமாக சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், பின்னலாடை நிறுவனத்தினர் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நொய்யல் ஆறு தூர்வாரப்பட்டது. மேலும், நொய்யல் ஆற்றை சுற்றிலும் மரக்கன்றுகளும் நடப்பட்டது. நொய்யல் ஆற்றில் குப்பை கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுநீர், சாயக்கழிவுநீர் போன்றவை கலக்காமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று திடீரென ராயபுரம், அணைமேடு, ஸ்டேட் பாங்க் காலனி, நடராஜா தியேட்டர் அருகே உள்ள பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி நொய்யல் ஆற்றில் நுரை நுரையாக கழிவுநீர் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நொய்யல் ஆறு தூர்வாரப்பட்ட நிலையில் மீண்டும் சுத்திகரிக்காமல் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:–

‘‘நொய்யல் ஆற்றில் கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகள் கலப்பது வாடிக்கையாகி விட்டது. தற்போது வாஷிங் நிறுவனங்களில் இருந்து அடிக்கடி கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதற்கு காரணமாக உள்ள நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நொய்யல் ஆற்றில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு தீவிரப்படுத்தினால் தான் நொய்யல் ஆற்றை காப்பாற்ற முடியும் ’’

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story