சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் பைபாஸ் சாலையில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வுக்கு புதிய அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஓமலூர்,

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வுக்கு இதுவரை கட்சி அலுவலகம் இல்லாமல் இருந்தது. சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே நீடித்து வருவதால், கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூரில், சேலம்-பெங்களூரு பைபாஸ் ரோட்டில் 7 ஆயிரம் சதுர அடியில் கட்சிக்கு புறநகர் மாவட்ட புதிய அலுவலக கட்டிடம் தரைத்தளம், முதல் தளம் என கட்டுவதற்கு கடந்த ஆண்டு பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கின.

எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தனித்தனியாக மீட்டிங் ஹால், 4-க்கும் மேற்பட்ட அறைகள் என சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது. இதைத்தொடர்ந்து புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சரும், புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்

நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏக்கள் செம்மலை, வெற்றிவேல், ராஜா, வெங்கடாஜலம், சக்திவேல், சின்னதம்பி, மருதமுத்து, மனோன்மணி, சித்ரா, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், ஆர்.ஆர்.சேகரன், எம்.கே.செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பச்சியப்பன், சித்தேஸ்வரன், நகர செயலாளர்கள் சரவணன், கணேசன், கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், தளபதி, ஓமலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், மாவட்ட விவசாய அணி பொருளாளர் பெரியசாமி, பச்சினம்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பழனிசாமி, காடையாம்பட்டி ஒன்றியம் விஜயன், வக்கீல் செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை

அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த படங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.எல்.ஏ.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கட்சி நிர்வாகிகள் வரிசையாக சால்வை மற்றும் மலர்க்கொத்து கொடுத்து முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர். புறநகர் மாவட்ட புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழாவையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனுக்கள்

முன்னதாக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் பெற்றார். மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர், தனக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை வேண்டும் என கேட்டு மனு கொடுத்தார். சிக்கனம்பட்டியை சேர்ந்த புதுமண தம்பதி ஏழுமலை- ஷாலா கழுத்தில் மாலை அணிந்த படியே வந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.

மேலும் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டன. கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் சாப்பாடு தயார் செய்யப்பட்டிருந்தது. கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு நடந்த விருந்தோம்பலில் பங்கேற்றார். அவர் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அங்கிருந்து மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி வளர்ச்சிப்பணி குறித்தும், உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை தயார்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து ஒன்றிய, நகர நிர்வாகிகளை தனியாக அழைத்து பேசினார். அதன் பின்னர் அவர், சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்து விட்டு பிற்பகல் 1.45 மணிக்கு காரில் ஈரோடு வழியாக கோவை புறப்பட்டு சென்றார். 

Related Tags :
Next Story