சேலத்தில் 2 இடங்களில் புதிய காவலர்களுக்கான பயிற்சி தொடங்கியது


சேலத்தில் 2 இடங்களில் புதிய காவலர்களுக்கான பயிற்சி தொடங்கியது
x
தினத்தந்தி 2 Nov 2017 4:00 AM IST (Updated: 2 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2 இடங்களில் புதிய காவலர்களுக்கான பயிற்சி தொடங்கியது.

சேலம்,

தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 41 மையங்களில் நேற்று முதல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்குள் அந்தந்த மையங்களுக்கு புதிய காவலர்கள் அனைவரும் வந்துவிட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 500 பேருக்கு சேலம் மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேலம் லைன்மேட்டில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி மையத்திற்கு 200 பேர் வந்தனர். அவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் பெட்டி, படுக்கையுடன் வந்தனர்.

இதேபோல், சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் ஈடுபடும் காவலர்களுக்கு முடி திருத்தும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மேலும், தற்காலிக பயிற்சி முகாமில் புதிய கழிவறைகள், குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பல்வேறு சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், லைன்மேடு மற்றும் குமாரசாமிப்பட்டி ஆகிய 2 இடங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான பயிற்சி நேற்று காலையில் தொடங்கியது. லைன்மேடு முகாமில் நடந்த பயிற்சியை போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் ராஜகாளஸ்வரன் தலைமையில் 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் ஜான்சன் கலந்து கொண்டு புதிய காவலர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி பயிற்சியை நடத்தினார்.

புதிய காவலர்களுக்கு உடற்திறன், உளவியல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு பணிகள், துப்பாக்கியை எவ்வாறு கையாள்வது? பொதுமக்களுடன் பழகுவது எப்படி? உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதுதவிர, கவாத்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேசுவதற்கு வசதியாக 5 ‘டெலிபோன் பூத்‘கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிகள் நிறைவடைந்தபிறகு புதிய காவலர்களுக்கு போலீஸ் நிலையங்களில் ஒரு மாத களப்பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story