பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை திருட்டு


பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 Nov 2017 3:45 AM IST (Updated: 2 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியையின் வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி நெல்லிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 45). இவர் காரிமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் பெருமாள் தர்மபுரியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை ராஜேஸ்வரி பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பெருமாள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து பெருமாள் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவின் உள்பகுதியில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட 30 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் எனக்கூறப்படுகிறது.

கைரேகைகள் பதிவு

இதுதொடர்பாக பெருமாள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டம் விட்ட மர்ம ஆசாமிகள் இந்த நகை திருட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகைகளை திருடிய துணிகர சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story