தரங்கம்பாடி, கொள்ளிடம் பகுதியில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின விவசாயிகள் கவலை


தரங்கம்பாடி, கொள்ளிடம் பகுதியில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி, கொள்ளிடம் பகுதியில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், அர்த்தஜாமக்கட்டளை, காலமநல்லூர், காழியப்பநல்லூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், திருவிடைக்கழி, திருவிளையாட்டம், ஈச்சங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வடிகால் வாய்க்கால்களை சரியாக தூர்வாராததால் தான் வயல்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஈச்சங்குடி விவசாய சங்க தலைவர் துரைராஜ் கூறுகையில், கடந்த 3 நாட்களாக பெய்த மழைக்கே பயிர்கள் மூழ்கி விட்டன. இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் மிக பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கு வடிகால் வாய்க்கால்களை தூர்வாராதது காரணமாகும். பருவமழை தொடங்குவதற்கு வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணிதுறை, வேளாண்மை துறையை சேர்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதற்கு ஒரே வழி அரசை நம்பாமல் இனிவரும் காலங்களில் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை வெட்டி சீரமைக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் என்றார்.

10 ஆயிரம் ஏக்கர்

இதேபோல கொள்ளிடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. மற்ற ஊர்களை விட கொள்ளிடத்தில் தான் அதிகமாக மழை பெய்தது. இதனால் கொள்ளிடம் பகுதியில் பல்வேறு ஊர்களில் குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பலத்த மழையால் அளக்குடி, ஆரப்பள்ளம், புளியந்துறை ஆகிய கிராமங்களில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதேபோல் பச்சைபெருமாள்நல்லூர், உமையாள்பதி, மாதானம், கடைக்கண்விநாயகநல்லூர் ஆகிய கிராமங்களிலும் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

Related Tags :
Next Story