டெங்கு ஒழிப்பு பணி முழுவீச்சில் நடைபெற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் துரைமுருகன் பேட்டி


டெங்கு ஒழிப்பு பணி முழுவீச்சில் நடைபெற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2017 4:30 AM IST (Updated: 2 Nov 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு, மழை முன்னெச்சரிக்கை பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்,

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் ரேஷன் கடைகளில் ரூ.13.50-க்கு விற்ற சர்க்கரை விலை ரூ.25 ஆக உயர்தப்பட்டதை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் வருகிற 6-ந் தேதி வேலூர் மத்திய மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து 8-ந் தேதி பண மதிப்பிழப்பு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

காட்பாடி டெல் தொழிற்சாலையை பெரும் முதலாளிக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது அங்குள்ள நிலங்களை அளந்து வருகிறார்கள். கேட்டால் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என்கிறார்கள். டெல் தொழிற்சாலையை விற்றால் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

வேலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் நியமனத்திற்கு தி.மு.க. சார்பில் தடையாணை பெறப்பட்டுள்ளது. இதை மீறி கலெக்டர் செயல்பட்டால் அவர்மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும். கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டமும் நடத்தப்படும். வேலூர் மாநகராட்சியில் 2 கமிஷனர்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது வெட்ககேடான செயல். லஞ்சம், ஊழலை தவிர்க்க நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை கமிஷனராக நியமிக்க வேண்டும்.

மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு எடுத்த ஒரே நடவடிக்கை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதுதான். சென்னையில் ஒருகால்வாய்கூட தூர்வாரப்படவில்லை. எந்த ஆறு எங்கிருக்கிறது என்பதுகூட அமைச்சர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு மக்களைபற்றி கவலை இல்லை. தி.மு.க. ஆட்சியில் பல ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியலுக்கு புதியவர். அவர் விவரம் தெரியாமல் தி.மு.க. ஏரிகளை தூர்வாரவில்லை என்று கூறியிருக்கிறார். டெங்கு ஒழிப்பு மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story