ஆங்கில மோகம் அதிகரிப்பால் கன்னட மொழிக்கு பின்னடைவு எடியூரப்பா வேதனை
கர்நாடகத்தில் மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரிப்பால் கன்னட மொழிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று எடியூரப்பா வேதனையுடன் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா அலுவலகம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ளது. அங்கு கன்னட ராஜ்யோத்சவா விழா நேற்று நடைபெற்றது. இதில் கன்னட கொடியை கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா ஏற்றி வைத்து பேசியதாவது:–கர்நாடக மாநிலம் மற்றும் கன்னட மொழியை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. கர்நாடகத்தை முன்னேற்ற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். அரசின் விவகாரங்கள் கன்னடத்தில் இருக்க வேண்டும். அதிகாரிகள் கன்னடத்தில் பேச வேண்டும். அப்போது தான் கன்னட மொழி வளரும். ஒருங்கிணைந்த கர்நாடகத்திற்கு போராடியவர்களை இந்த நாளில் நாம் நினைவுகூற வேண்டும். கன்னடத்திற்காக பெலகாவியில் சுவர்ண சவுதா நிறுவப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் முழுமையாக பயன்படுத்தப்படும் என்று நான் கருதினேன்.
ஆனால் அந்த சுவுர்ண சவுதாவை அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற வேதனை எனக்கு உள்ளது. பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பினர் கன்னடத்திற்கு எதிராக செயல்படுவது சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன். மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்து வருவதால் கன்னட மொழிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கன்னடத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Related Tags :
Next Story