4-வது நாளாக பலத்த மழை: வைத்தீஸ்வரன்கோவிலில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


4-வது நாளாக பலத்த மழை: வைத்தீஸ்வரன்கோவிலில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 4-வது நாளாக பெய்த பலத்த மழையால் வைத்தீஸ்வரன்கோவிலில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கடந்த 27-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைதொடர்ந்து வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நாகை மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக பலத்த மழை பெய்தது. இரவு-பகலாக தொடர்ந்து பெய்துவரும் இந்த மழையால் நாகை மாவட்டம் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், தற்போது நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகையில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் பைபர் படகு மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கடுவையாற்று கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் வடிகால் வசதிகள் இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. தண்ணீர் தேங்குகிறது என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல் நாகை மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தலைஞாயிறு, வாய்மேடு, காமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திருமருகல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் எக்டேரில் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் மூழ்கி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தொடர் மழையால் கோவிலான் வாய்க்கால், திருநகரி வாய்க்கால்களில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட விளக்குமுகத்தெரு, தெற்குவெளி காலனி, வேலவன் நகர், அண்ணாநகர், ரெயில்வே ரோடு, வள்ளுவர் தெரு, திருவாவடுதுறை மடத்துதெரு, புங்கனூர் சாலை, மருவத்தூர், நல்லாஞ்சாவடி, நயினார்தோப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் 300 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விளக்குமுகத்தெரு, தெற்குவெளி காலனி உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாரதி எம்.எல்.ஏ., கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாகையில் அதிகபட்சமாக 70.2 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் 5 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:- வேதாரண்யம் 66.6, தரங்கம்பாடி 63, திருப்பூண்டி 61.2, சீர்காழி 45.6, கொள்ளிடம் 42, தலைஞாயிறு 39.2, மணல்மேடு 12.6. 

Related Tags :
Next Story