ராமேசுவரம் கடல் கொந்தளிப்பு: படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


ராமேசுவரம் கடல் கொந்தளிப்பு: படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 3 Nov 2017 10:30 AM IST (Updated: 3 Nov 2017 10:29 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்பால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று காலை மழை பெய்தது. ராமேசுவரம் தீவில் காலை முதல் பலத்த மழை கொட்டியது.

இதனால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் தெற்கு ரத வீதியில் மழை நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு சென்றுவர சிரமப்பட்டனர். ராமதீர்த்தம் பகுதியில் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்து நின்றது.

இது போல் மார்க்கெட் தெரு, நகராட்சி அலுவலக பகுதி உள்பட தாழ்வான இடங்களிலும் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. எஸ்.பி.ஏ. பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் தேசிய நெடுஞ் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால் மாலையில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பிய மாணவிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ரெயில் பால உயரத்திற்கு கடல் அலைகள் மேல் நோக்கி சீறி எழுந்தன. மண்டபத்தில் கடலோர காவல் படை முகாமின் தடுப்புச்சுவரில் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதின.

படகு மூழ்கியது

மண்டபத்தில் இருந்து ஹிக்மத் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் பால்ராஜ், சீமைச்சாமி, ரமலான், முனியசாமி ஆகிய 4 மீனவர்களும் பாக்ஜலசந்தி கடல்பகுதியில் மீன் பிடித்து விட்டு நேற்று காலை மண்டபம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகு நிலை தடுமாறி கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 4 மீனவர்களையும் அந்த பகுதியில் நாட்டுப் படகில் மீன்பிடித்த மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story