தஞ்சை–திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை பணி 85 சதவீதம் நிறைவு


தஞ்சை–திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை பணி 85 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 3 Nov 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை–திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் தஞ்சையும் ஒன்று. இந்த தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்–திருச்சி இடையேயான ரெயில்வே பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை வழியாக குறைந்த அளவே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தஞ்சை வழியாக 29–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலும், 15–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை, மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மார்ச் 1–ந் தேதியுடன் திருவாரூர் வழியாக இயக்கப்பட உள்ளது.

தஞ்சை–திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ரெயில் நிலையத்தில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் 1 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே தஞ்சை–திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு தஞ்சை– திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

கடந்த 2011–12–ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை– திருச்சி இடையே பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையை இரட்டை ரெயில்பாதையாக மாற்ற ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தஞ்சை–திருச்சி இடையே இடதுபுறமாக ஏற்கனவே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்த தடத்தில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பொன்மலையில் இருந்து சோழகன்பட்டி வரை பணிகள் முடிக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியில் இயக்கப்பட்டு வருகிறது. சோழகன்பட்டியில் இருந்து தஞ்சை சிவாஜிநகர் வரை இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது.

அங்கிருந்து இன்னும் 1 கிலோமீட்டர் தூரம் வரை தான் பணி நடைபெற வேண்டும். இந்தநிலையில் சோழகன்பட்டியில் இருந்து தஞ்சை சிவாஜிநகர் வரை முடிவடைந்த பணிகளை ரெயில்வேதுறை தலைமை செயல் இயக்குனர் இன்று(சனிக்கிழமை) டிராலியின் மூலம் சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்கு முன்னோட்டமாக தஞ்சை, திருச்சி ரெயில்வே அதிகாரிகள் நேற்று டிராலி மூலம் இரட்டை ரெயில்பாதையை ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, பொன்மலை முதல் சோழகன்பட்டி வரை இரட்டை ரெயில்பாதை பணி நிறைவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சோழகன்பட்டியில் இருந்து தஞ்சை சிவாஜிநகர் வரை பணி முடிவடைந்துள்ளது. அதாவது இதுவரை 85 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இன்னும் 15 சதவீத பணி மட்டுமே பாக்கியுள்ளது. அந்த பணி விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர். இந்த வழித்தடம் அமைந்தால் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரெயில்கள் 50 நிமிடத்திலும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 30 நிமிடத்திலும் சென்றடையும்.


Next Story