குழித்துறை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்
சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி குழித்துறையில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கழுவன்திட்டை, சிதறால், உத்திரங்கோடு, ஞாறாம்விளை, பரக்குன்று போன்ற பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளன.
இதனை சீரமைக்க கோரி விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தார். பல முறை இதற்காக அதிகாரிகளை சந்தித்து பேசியும் சாலைகள் இதுவரை சீரமைக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் விஜயதரணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகளுடன் குழித்துறையில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலத்திற்கு திடீரென சென்றார்.
அங்கு தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சித்ரா மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் விஜயதரணி எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சேதம் அடைந்த சாலைகளில் உடனடியாக பராமரிப்பு பணிகள் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை விஜயதரணி கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.