கூலிக்கு பனியன் தைத்து கொடுப்பதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு


கூலிக்கு பனியன் தைத்து கொடுப்பதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2017 4:15 AM IST (Updated: 4 Nov 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

கூலிக்கு பனியன் தைத்து கொடுப்பதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பூரில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூரில் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று திருப்பூர் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஜவுளி தொழிலை நம்பி வாழ்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் ஜவுளி தொழில் நலிவடைந்து விட்டது. கூலிக்கு பனியன் துணிகளை தைத்துக்கொடுப்பதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி விதித்ததால், பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மிகப்பெரிய அதிருப்தியோடு, அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதுபோல் மாநில அரசும் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வறுமையால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக போலீசார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன் கோவையில் இருந்து சேலம் வரை அவர் காரில் சென்றபோது வழியில் 10 அடிக்கு ஒரு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். இதற்காக 4 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதேவைதானா?. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு கிடையாது. தமிழகத்தில் உள்ள போலீசார் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கு பதிலாக, மக்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் தொல்லைகளை தடுப்பதற்கு பதிலாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுப்பதிலேயே அவர்கள் நேரம் கழிந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு சர்வாதிகாரமான போக்கு. இதை நீக்க வேண்டும். மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி சமீபகாலமாக ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு எப்போது ஒழியும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

2 வருடங்களுக்கு முன்பு மழை, புயலால் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பல பேர் உயிரிழந்தனர். அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. காரிலேயே சென்று விட்டு காரிலேயே திரும்பினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார்கள். அதற்கு பிறகும் பாடம் கற்றுக்கொள்ளாமல் இன்றைக்கு மிகவும் அவல நிலையில் சென்னை இருக்கிறது. ஒருநாள், 2 நாள் மழையால் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

அதைப்பற்றி கண்டுகொள்ளாமல், எப்போது கேட்டாலும், எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், அமெரிக்காவை விட இங்கிலாந்தை விட நாங்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம் என்று வாய்கிழிய பொய் சொல்கிறார்களே தவிர மக்கள் துயரை போக்குவதற்கு இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் வருவதற்கு உரிமை உண்டு. நான் அவருடைய நண்பர் என்ற முறையில் சொல்லிக்கொள்வது, நீங்கள் ஏன் ஒருபக்கம் போய் சேர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் அரசியலுக்கு வந்தே தீருவேன் என்று முடிவு எடுத்தால் அது அவருடைய விருப்பம்.

பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எல்லோரையும் மிகவும் மட்டமாக, இழிவாக, கேவலமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்ல. இந்தியா ஜனநாயக நாடு என்ற பெயர் போய், மோடியின் சர்வாதிகார ஆட்சி தான் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், காளிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


Next Story