இரட்டை கொலை வழக்கில் கையெழுத்து போட போலீஸ் நிலையத்திற்கு ஆயுதங்களுடன் காரில் வந்த 16 பேர் கைது
இரட்டை கொலை வழக்கில் கையெழுத்து போட போலீஸ் நிலையத்திற்கு ஆயுதங்களுடன் வந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
மலைக்கோட்டை,
திருச்சி ஓயாமரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 1–ந்தேதி இரட்டை கொலை நடந்தது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தஞ்சை மாவட்டம் திருச்செனம்பூண்டி பகுதியை சேர்ந்த சுகந்தி, சுந்தரமூர்த்தி, மோகன், இளையரசன் ஆகிய 4 பேர் கோர்ட்டு உத்தரவின்பேரில், திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 26–ந் தேதி முதல் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று கையெழுத்து போடுவதற்காக இவர்கள் 4 பேர் மற்றும் இவர்களுக்கு துணையாக மேலும் 12 பேர் என மொத்தம் 16 பேர், 2 கார் மற்றும் பஸ்சில் ஆயுதங்களுடன் வருவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோட்டை போலீசார் தேவதானம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 காரை மறித்து சோதனை நடத்தியதில், அவற்றில் 4 இரும்பு குழாய்கள், 2 அரிவாள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த ஆயுதங்கள் மற்றும் 2 காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் வந்த சுந்தரமூர்த்தி, அருண்குமார், குலோத்துங்கன், வெங்கடேஷ், சண்முகம், ராமச்சந்திரன், பரதன், முருகேசன், இளையரசன், மோகன், சுகந்தி, மணிகண்டன், தர்மராஜ், விக்னேஷ், விவேக் மற்றும் பஸ்சில் வந்த சண்முகில் ஆகிய 16 பேரையும் போலீசார் கைது செய்து, திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.