கோவில்பட்டியில் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் ஆதார்– செல்போன் எண் இணைக்க சிறப்பு முகாம்


கோவில்பட்டியில் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் ஆதார்– செல்போன் எண் இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 4 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் ஆதார் எண், செல்போன் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நே‌ஷனல் பொறியியல் கல்லூரியில் தபால் துறை சார்பில், தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் ஆதார் எண், செல்போன் எண் இணைக்க சிறப்பு முகாம் நேற்று காலையில் நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கி, ஒரு பயனாளியிடம் தபால் நிலைய சேமிப்பு கணக்கில் ஆதார் எண், செல்போன் எண்ணை இணைக்க விண்ணப்பத்தை பெற்று கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:–

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அகில இந்திய அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று ஸ்ரீரங்கம் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்ததற்காக யுனெஸ்கோ நிறுவனமும் தமிழக அரசை பாராட்டியது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால்தலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவில்பட்டி தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் ராமசாமி பேசுகையில், ‘நாடு முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 7 லட்சத்து 56 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 200 சேமிப்பு கணக்குகளில் ஆதார் எண், செல்போன் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதி உள்ள சேமிப்பு கணக்குகளிலும் ஆதார் எண், செல்போன் எண் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கோவில்பட்டி கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 45 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் ரூ.58 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது‘ என்றார்.

விழாவில் தபால்துறை கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் முருகன், ஜெயராயம்மாள், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், கல்லூரி முதல்வர் சண்முகவேல், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறுகையில், சென்னையில் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கையில் 34 அமைச்சர்களும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள மண்டபங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நடிகர் கமல்ஹாசன் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசக் கூடாது என்றார்.

கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, 133 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, தலைமை ஆசிரியை சுகந்தி லிதியாள், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய துணை செயலாளர் செண்பகமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், தலைமை கழக பேச்சாளர் சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 114 மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. கயத்தாறு தாசில்தார் முருகானந்தம், தலைமை ஆசிரியர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 26 மாணவ–மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story