பெரியபாளையம் அருகே கனமழையால் ஏரி நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் போக்குவரத்து பாதிப்பு
கனமழை காரணமாக பெரியபாளையம் அருகே அத்திவாக்கம் செல்லும் சாலையில் ஏரித்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அத்திவாக்கம் ஏரி பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஏரி நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது.
இதையடுத்து ஜெயபுரத்தில் இருந்து அத்திவாக்கம் செல்லும் ஏரிக்கரை சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே ஜெயபுரத்தில் இருந்து மாற்றுப்பாதையில் ஆலப்பாக்கம் வழியாக அப்பகுதி மக்கள் அத்திவாக்கம் சென்று வருகின்றனர்.
கிளாம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கு செல்லும் வரவு கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. மேலும் வெங்கல்–கன்னிகைபேர் நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சிறுபாலம் அமைக்காமல் தார் சாலை அமைத்தனர்.
இதனால் சாலையின் மேற்கு திசையில் உள்ள தண்ணீர் கிழக்கு நோக்கி வர வழியில்லை. இதையடுத்து மழையால் நிரம்பி வெங்கல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கிளாம்பாக்கம் ஊருக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சிறுபாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அந்த இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தற்காலிகமாக பொக்லைன் மூலம் சாலையில் பள்ளம் வெட்டி ஏரிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.