சென்னை மற்றும் புறநகரில் ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் திட்டம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ராயபுரம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை, கண்ணன் ரவுண்டானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். மேலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர், தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு மாநகராட்சி பள்ளியில் தங்கவைக்கப்பட்டு உள்ள மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, செல்லூர் ராஜு, அ.தி.மு.க. அவை தலைவர் இ.மதுசூதனன், அம்மா பேரவை வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதன் ஆகியோர் இருந்தனர்.
இதையடுத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்களத்தூர், அமுதம் நகர், கிஷ்கிந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏரி உடைப்பு, மழைநீர் தேக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். அவருடன் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் ஒருசில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மழைநீரை வடிய செய்துள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மழையின்போது ரூ.1,100 கோடியில் 386 கிலோ மீட்டர் தூரம் வடிகால்வாய்கள் அமைக்க ஜெயலலிதா அறிவித்தார். அதில் 300 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிந்துவிட்டன. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும். மேலும் ஜெய்கா திட்டத்தில் ரூ.1,800 கோடி செலவில் இதுபோன்ற பணிகள் தொடங்க உள்ளன.
சென்னையில் கடந்த 3 தினங்களில் 36 சென்டிமீட்டர் மழை பெய்தும் தண்ணீர் தேங்காமலும், தேங்கிய தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டும் மக்கள் பாதிக்காத வகையில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடையாறு ஆற்றில் தூர்வாரப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாப்பங்கால் ஆற்றில் குறுகிய ஓடையாக இருந்தது அகலப்படுத்தப்பட்டு உள்ளது. கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டதால் தண்ணீர் ஊருக்குள் செல்லாமல் தடையின்றி செல்கிறது. முதல்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1,519 ஏரிகளில் தூர்வாரப்பட்டு வண்டல் மண் இயற்கை உரமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஏரிகளில் கூடுதலாக 30 சதவீதம் நீர் கொள்ளளவு உள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் ஏரி, ஆறு போன்ற பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்படும். இந்தாண்டு முதற்கட்டமாக ரூ.350 கோடி செலவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.