சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.600 கோடியில் புதிய திட்டம்


சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.600 கோடியில் புதிய திட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 5:00 AM IST (Updated: 4 Nov 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.600 கோடியில் புதிய மெகா திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் செல்ல வழி இல்லாமல் அங்குள்ள வீடுகளை சூழ்ந்து கொண்டது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் மழைநீர் கால்வாய், சாலைக்கு அடியில் உள்ள சிறிய பாலங்களில் அடைப்புகள் அகற்றப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கால்வாய் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன. இந்த பணிகளை அமைச்சர் அன்பழகன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலருமான அமுதா, மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:–

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் நிவர்த்தி பணிகளை செய்ய முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதுபோல் 15 மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

மழைநீர் செல்லக்கூடிய பாதைகளில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதால் மழைநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க மழைநீர் கால்வாய்களை சீரமைக்கின்ற வகையில் புதிதாக ரூ.600 கோடியில் மெகா திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளது.

கடந்த 2015–ம் ஆண்டு பெய்த மழையின்போது சென்னை புறநகர் பகுதிகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருங்காலத்தில் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையிலும், எங்கும் மழைநீர் தேங்காத வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தற்காலிகமாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு முனைப்புடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களில் குறைந்த அளவில் மழை பெய்தது. தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் அதிகபட்சமான மழை பெய்ததால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. மெகா திட்டம் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா கூறும்போது, ‘‘சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் இணைத்து மெகா திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏரி கால்வாய்களில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு உள்ளோம். ரூ.600 கோடியிலான சிறப்பு திட்டத்துக்கு நிதி கேட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிதி வந்த பின்னர் விரைவில் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

அப்போது அமைச்சர் அன்பழகனை, அப்பகுதி பொதுமக்கள், சூழ்ந்துகொண்டு தங்கள் பகுதிகளுக்கு வந்து பார்வையிட வேண்டும் என்று அழைத்தனர். அதற்கு அமைச்சர், ‘‘நான் எல்லா பகுதிகளுக்கும் வருவேன்’’ என்று கூறி விட்டு சென்றார்.


Next Story