சாலையில் செல்போன் பார்க்கத் தடை!


சாலையில் செல்போன் பார்க்கத் தடை!
x
தினத்தந்தி 4 Nov 2017 12:49 PM IST (Updated: 4 Nov 2017 12:49 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் சாலையை கடக்கும்போது, செல்போன் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரிக்கா ஹவாய் ஹோனலுலு நகரத்தில் சாலைகளைக் கடக்கும்போது, பாதசாரிகள் தங்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு சட்டம் வருவது இதுவே முதல்முறை.

கடந்த ஜூலை மாதம் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, கடந்த மாத இறுதியில் அமலுக்கு வந்தது. கவனக்குறைவால் சாலையில் நடக்கும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான ஒரு முன்முயற்சியாக இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறுபவர்களிடம் 15 டாலர் முதல் 35 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும். திரும்பத் தவறு செய்பவர்களுக்கு 99 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

இந்தச் சட்டத்தின்படி, நடந்துசெல்லும் நபர்கள் சாலை அல்லது நெடுஞ்சாலையைக் கடக்கும்போது எவ்வித மின்னணுச் சாதனத்தையும் பயன்படுத்தக்கூடாது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு, இந்த ‘கவனமின்றி நடப்பதை’ கடந்த 2015-ம் ஆண்டு, மனிதர்களால் செயற்கையாக காயம் ஏற்படுத்தும் விபத்துகள் பட்டியலில் சேர்த்தது. அதே ஆண்டு, ‘ஜர்னல் ஆப் சேப்டி ஸ்டடீஸ்’ என்னும் ஆய்விதழில் வருடந்தோறும் நூற்றுக் கணக்கான அமெரிக்கப் பாதசாரிகள் தங்களின் செல்போனை பயன்படுத்தியபடி நடந்தபோது கவனக்குறைப்பாட்டால் விபத்தில் சிக்கியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

வேறு பல நாடுகள், ‘ஸ்மார்ட்போன்ஸ் ஸோம்பீஸ்’ என்று அழைக்கப்படும், செல்போனுக்கு அடிமையானவர்களை கையாளுவதற்குப் பல்வேறு விதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திவருகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கு ஏற்படப்போகும் போக்குவரத்து நெரிசலைத் தெரிவிக்கும் ‘ஆப்’ உள்ளிட்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் இதற்கு முன்பு சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

Next Story