‘வற்றிப்போன’ கடல்!


‘வற்றிப்போன’ கடல்!
x
தினத்தந்தி 4 Nov 2017 1:29 PM IST (Updated: 4 Nov 2017 1:29 PM IST)
t-max-icont-min-icon

‘குளம் வற்றிப்போகலாம்... ஆனால் கடல் வற்றிப் போகுமா?’ என்பார்கள். ஆனால், ‘வற்றிப்போன’ ஒரு கடலைப் பற்றிய கதை இது...

1960களில் அந்தக் கடலில் இருந்து ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட பெரும் நீர்ப்பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலால் அது வற்றிப் போய்விட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா?

‘ஏரல் கடல்’ என்று அழைக்கப்பட்ட ‘ஏரல் ஏரி’தான் வற்றிப்போய்விட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாகவும் திகழ்ந்தது.

ஏரி என்பதை விட குட்டிக் கடல் என்றே சொல்லும் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் அது அமைந்திருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனும் இரண்டு ஆறுகள் ஆப்கானிஸ்தான், தஜிக்கிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்புக்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதை ‘ஏரல் கடல்’ என மக்கள் அழைத்தனர். ‘ஏரல்’ என்றால் தீவு என்று பொருள்.

ஏரல் கடலுக்குள் 1100 குட்டித்தீவுகள் இருந்தன என்றால் இதன் பிரம்மாண்டம் புரியும். ஆரம்பகாலத்தில் 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட தாக இது இருந்தது.

இந்நிலையில், சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது, மத்திய ஆசியாவின் வறண்ட நிலப்பரப்பை வளமாக்க அந்தப் பகுதியில் பருத்திச் செடிகளை விளைவித்து பசுமையை உண்டாக்கலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர்.

திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான் என்றாலும், அதைச் செயல்படுத்திய விதத்தில்தான் குளறுபடி.

அமோக விளைச்சலை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அதிக அளவில் வேதி உரங்களைப் பயன்படுத்தினர். அமுதர்யா, ஸைர்தர்யா ஆறுகளின் நீர் வளத்தை அதற்காக திருப்பிவிட்டனர். இதனால் ஏரல் கடலுக்கு நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960-ல் இருந்த பாசனப் பரப்பு 1980-ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. மேற்கண்ட ஆறுகளின் 90 சதவீத தண்ணீர், பருத்தி பயிர் விளைவிப்பதற்கே உபயோகிக்கப்பட்டது.

1970-ல் ஏரல் கடலில் 6 அடி நீர்மட்டம் குறைந்தது. நீரின் அளவு குறையக் குறைய அதன் உப்பு அளவு அதிகமானது. ஏரலின் உயிர்நாடியான ஆறுகளைத் தடுத்ததோடு நிற்கவில்லை, வேதிக் கழிவுகளையும் வரைமுறையின்றி அதில் கொட்டினர்.

இவ்வளவையும் தாண்டி ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்குப்பிடித்தன. ஆனால் 80-களில் தொடக்கத்தில் அவையும் முற்றிலுமாக அழிந்து போயின. அதனால், மீன்வளத்தைச் சார்ந்திருந்த உயிரினங்களும், பறவை இனங்களும் கூட காணாமல் போய்விட்டன.

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர்க் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூரமிடப்பட்டிருந்தன. நீர் மட்டம் குறைந்ததால் அவை மெல்ல மெல்லக் கரை தட்டி மண்ணில் புதைந்தன.

1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபோது உஸ்பெகிஸ்தான், கஜக்கஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் ஏரல் கடல் வந்தது. ஆனால் அவையும் சோவியத்தின் விவசாய பாணியையே பின்பற்றி ஏரலின் கழுத்தை நெரித்தன. இதன் மொத்த நீர்ப் பரப்பு, பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

ஏரலின் தண்ணீர்ப் பரப்பு குறையக் குறைய அதன் அடிவண்டலில் படிந்து இருந்த வேதிப் படிமங்கள் சுழற்காற்றில் சிக்கி, அப்பகுதி முழுக்க புழுதிக்காடாக மாறியது. அந்த நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 10-ல் ஒரு குழந்தை ஒரு வயதுக்கு முன்னால் மரணத்தைத் தழுவுகிறது.

மனிதர்கள் உள்பட பல்லாயிரம் உயிர்களின் ஆதாரமாக இருந்த ஏரல் கடல், மனிதனின் பேராசையால் சாகடிக்கப்பட்டு விட்டது.

புத்திசாலித்தனமாய்ச் செயல்படுகிறோம் என்ற பெயரில் இயற்கையைச் சீரழித்தால் என்னவாகும் என்பதற்கு, ‘ஏரல்’ ஓர் அழுத்தமான பாடம்! 

Next Story