அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இறந்த நெல்லை ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்


அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இறந்த நெல்லை ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
x
தினத்தந்தி 5 Nov 2017 2:45 AM IST (Updated: 4 Nov 2017 6:04 PM IST)
t-max-icont-min-icon

அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இறந்த நெல்லை ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

நெல்லை,

அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இறந்த நெல்லை ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரர் மரணம்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலை அய்யப்பா நகரை சேர்ந்த விஜயராஜ் மகன் ராஜேஷ் (வயது 34). ராணுவ வீரரான இவர் அருணாசல பிரதேச மாநிலம் தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் படை வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் பணியில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அருணாசல பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜேஷ் உடல் நெல்லைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கிருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று அதிகாலை விமானம் மூலம் ராஜேஷ் உடல் கொண்டு வரப்பட்டது.

அரசு மரியாதை

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்சு மூலம் நேற்று காலை 11.25 மணிக்கு பாளையங்கோட்டை மங்கம்மாள் சாலையில் உள்ள ராஜேசின் சகோதரி வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் ராஜேஷ் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதை தொடர்ந்து தேசிய கொடி போர்த்தப்பட்ட ராஜேஷ் உடல், வி.எம்.சத்திரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், மைதீன்கான், அ.தி.மு.க. (அம்மா அணி) மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமது அலி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

இதைதொடர்ந்து கர்னல் ஷேர்பா, லெப்டினன்ட் கர்னல் பிரகாஷ் யாதவ், சுபேதார் ஓம் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை உயர்த்திப்பிடித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து அங்கு ராஜேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். மரணம் அடைந்த ராஜேசுக்கு தீபா (26) என்ற மனைவியும், விகாஷ் (4), ஆதீஷ் (1½) ஆகிய மகன்களும் உள்ளனர்.


Next Story