இடியும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றம்
பூந்தமல்லி அருகே உள்ள அகரமேல் ஊராட்சிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா தெருவில் தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது.
பூந்தமல்லி,
கடந்த 1989–ம் ஆண்டு பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த 45–க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் 25–க்கும் மேற்பட்டோர், இந்த வீடுகளை விற்று விட்டும், உறவினர்களுக்கு கொடுத்து விட்டும் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். தற்போது 15 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்த தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் தொகுப்பு வீடுகளின் சிமெண்டு மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டும், சில வீடுகளில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் அந்த வீட்டில் வசித்த கஸ்தூரி என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட அனைத்து வீடுகளிலும் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் மேற்கூரை எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளில் வசித்து வந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரவேண்டும். அதுவரை சமுதாய கூடத்தை விட்டு வெளியே வரமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.