ராமேசுவரம் தீவு பகுதியில் விடியவிடிய பலத்த மழை தங்கச்சிமடத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
ராமேசுவரம் தீவு பகுதியில் விடியவிடிய பெய்த பலத்த மழைபெய்தது. தங்கச்சிமடத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
ராமேசுவரம்,
கடலோர பகுதியான ராமேசுவரம் தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடியவிடிய பலத்த மழையாக பெய்துகொண்டே இருந்தது. நேற்று காலை 7 மணி வரை இடைவிடாமல் பெய்த மழையால் எஸ்.பி.ஏ. பள்ளி பகுதி, சீதா தீர்த்தம் பகுதி உள்ளிட்ட நகரின் தாழ்வான பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
தங்கச்சிமடம், பாம்பன் பகுதியிலும் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. தங்கச்சிமடம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பும் தங்கச்சிமடம் தென்குடா பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதை சாலையிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளை மழை நீர் சூழ்ந்தது.
மழை நீர் வடிய வழியில்லாததால் அந்த பகுதியில் அதிகஅளவில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் மழை நீரை அகற்ற வேண்டும் என பல முறை தெரிவித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.மேலும் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:–ராமேசுவரம்– 31, தங்கச்சிமடம் –18.2, பாம்பன்–14, பள்ளமோர்குளம்–9, மண்டபம்–6.4, தொண்டி–1.