தேவகோட்டையில் நகை–பணம் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைத்து சென்ற திருடர்கள்


தேவகோட்டையில் நகை–பணம் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைத்து சென்ற திருடர்கள்
x
தினத்தந்தி 5 Nov 2017 3:30 AM IST (Updated: 5 Nov 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடர்கள், நகை–பணம் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் அந்த வீட்டிற்கு தீவைத்து சென்றனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை ராம்நகர், 3–வது வீதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான சக்கந்தி கிராமத்திற்கு சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து நகை–பணம் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். ஆனால் திருடர்களுக்கு எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பன்னீர்செல்வம் வீட்டினுள் இருந்த டி.வி., மிக்சி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும், துணி மணிகளையும் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் வீட்டினுள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து தேவகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் நுழைந்தபோது, முன்பக்க கதவு பூட்டியபடி கிடந்தது. இதனால் கதவு உடைக்கப்பட்டு கிடந்த பின்பக்க வாசல் வழியாக வீட்டினுள் சென்று தீயை அணைத்தனர். சரியான நேரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில் தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை–பணம் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைத்து சென்ற சம்பவம் தேவகோட்டை நகர் மக்களிடையே அச்சத்தை கிளப்பியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று ராம்நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம்–நகைகள் கிடைக்காததால் கொள்ளையர்கள் வீட்டிற்கு தீவைத்து சென்றனர். இது 2–வது சம்பவமாகும். தேவகோட்டை நகர் பகுதியில் சமீப காலமாக கொள்ளை முயற்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் அதே வீதியில் உள்ள ராணுவவீரர் வீட்டில் 36 பவுன் நகைகள் கொள்ளை போனது. சில வாரங்களுக்கு முன்பு நகரில் உள்ள அடுத்தடுத்த 4 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story