மலைப்பாதையில் ஜீப்கள் மோதல்: 7 பெண் தொழிலாளர்கள் படுகாயம்


மலைப்பாதையில் ஜீப்கள் மோதல்: 7 பெண் தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:00 AM IST (Updated: 5 Nov 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

போடிமெட்டு மலைப்பாதையில் ஜீப்கள் மோதியதில் 7 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

போடி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலை செய்வதற்காக போடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெண்கள் சென்று வருகின்றனர். தினமும் காலையில் தொழிலாளர்களை ஜீப்களில் அழைத்து சென்று மாலையில் கிராமங்களில் கொண்டு விடுவர்.

அதன்படி நேற்று காலை போடியை அடுத்த மீனாட்சிபுரம், டொம்புச்சேரி ஆகிய கிராமங்களில் இருந்து 15 பெண் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு ஒரு ஜீப் புறப்பட்டது. அந்த ஜீப்பை டொம்புச்சேரியை சேர்ந்த சரவணன் (வயது 21) என்பவர் ஓட்டினார். கேரள மாநிலம் சதுரங்கபாறையில் உள்ள நமரி எஸ்டேட் பகுதிக்கு அவர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

போடிமெட்டு மலைப்பாதையில் மணப்பட்டி கிராமம் அருகே ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஜீப், எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சாலையோரத்தில் ஒதுங்கி நின்றது. அப்போது சரவணன் ஓட்டி வந்த ஜீப், நின்று கொண்டிருந்த ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சரவணனின் ஜீப்பில் பயணம் செய்த டொம்புச்சேரியை சேர்ந்த தங்கமணி (35), சுந்தரம்மாள் (55), ராணி (47), மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜலட்சுமி (60), சிவபாக்கியம் (49), ஜோதி (50), லட்சுமி (45) ஆகிய 7 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குரங்கணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story