தேனியில் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தொடக்கம்
தேனியில் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டை, ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா திறந்து வைத்தார்.
தேனி,
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கோர்ட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். பின்னர் நடந்த விழாவில், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பேசும் போது கூறியதாவது:–
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக தான் கூடுதல் கோர்ட்டுகள் திறக்கப்படுகின்றன. அந்த வகையில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டு திறக்கப்பட்டு உள்ளது. ஜூடிசியல் கோர்ட்டுகள் மக்களை அதிகம் சந்திக்கக்கூடியவை. இங்கு வழக்குகள் தேக்கம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்வதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கூடுதல் கோர்ட்டுகள் அமைக்கப்படும் வேளையில், வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தால் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
வக்கீல்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும். எனவே, வக்கீல்கள் நீதித்துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட செசன்சு நீதிபதி செந்தில்குமரேசன் வரவேற்றார். இதில், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், நீதிபதிகள் சுமதி, கருப்பையா, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு குமரேசன் மற்றும் நீதிபதிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அரசு வக்கீல் டி.கே.ஆர்.கணேசன், அரசு சிறப்பு வக்கீல் வெள்ளைச்சாமி, தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.