பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரருக்கு அபராதம்


பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரருக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:00 AM IST (Updated: 5 Nov 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போலீசார் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

கோத்தகிரி,

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை மீறி ஒரு சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுதொடர்ந்து போலீசார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளை சோதனை செய்து புகையிலை விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் உத்தரவுபடி சப்– இன்ஸ்பெக்டர்கள் கவுதம், நசீர், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே சட்டவிரேதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளுக்கு போலீசார் சென்று புகையிலை பொருட்களை விற்பனை செய்யகூடாது, மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததுடன், விழிப்புணர்வு துண்டுபிரங்களை வினியோகம் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் கடைக்காரர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே கோத்திகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பள்ளி அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த கடை உரிமையாளர் பரமசிவம் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story