கனமழையால் கிண்டி சிறுவர் பூங்காவை வெள்ளம் சூழ்ந்தது


கனமழையால் கிண்டி சிறுவர் பூங்காவை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 5 Nov 2017 4:30 AM IST (Updated: 5 Nov 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா வெள்ளம் சூழ்ந்து தெப்பக்குளம்போல காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிய இடமின்றி தேங்கியுள்ளது.

பூங்காவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள வாத்துகள், மயில்கள், குரங்குகள், ஈமு கோழிகள், தீக்கோழிகள், காட்டு ஆடுகள், கிளிகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் குளிர்ந்த சூழ்நிலையால் உற்சாகம் அடைந்துள்ளன. மழையில் நனைந்து ஒன்றோடு, ஒன்று கொஞ்சி குலாவி விளையாடி மகிழ்கின்றன.

சாதாரண நாட்களில் சிறுவர் பூங்காவுக்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் செல்வது வழக்கம். ஆனால் கனமழை தொடங்கியதில் இருந்து சிறுவர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. கடந்த திங்கட்கிழமை 232 பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர். ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் காலியாக கிடந்தன.

பூங்கா ஊழியர்கள் கூறுகையில், “கனமழை பெய்ய தொடங்கியதில் இருந்து பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. 80 சதவீதம் அளவுக்கு பார்வையாளர்களின் வருகை குறைந்துள்ளது. மழை விடைபெற்ற பின்னர் தான் வழக்கமான கூட்டம் வரும்” என்றனர்.

Next Story